11/06/2022 (470)
‘அன்பின் விழையார்’, ‘பண்பில் மகளிர்’ என்று முதல் இரு குறள்களில் குறிப்பிட்ட வரைவின் மகளிரை மூன்றாவது பாடலில் ‘பொருட் பெண்டீர்’ என்று அடைமொழி கொடுக்கின்றார்.
ஏதோ, அவர்களைக் கடிந்து கொள்வதுபோல இருப்பினும், நம் பேராசான் உண்மையில் சொல்வது அவர்கள் பின் செல்லும் கூட்டத்தைப் பற்றித்தான்.
‘பிணம்’ என்னும் சொல்லை நம் பேராசான் திருக்குறளில் ஒரே ஒரு இடத்தில் மட்டும்தான் பயன்படுத்தி உள்ளார்.
பிணம் என்றால் உயிரற்ற உடல். அதில் உணர்ச்சிக்கு வழியில்லை. பிணத்தினைக்கூடி ஒருவன் இன்பம் துய்க்க முடியுமா? முடியாது. சில மனப்பிறழ்வு கொண்டவர்கள் முயலவும்கூடும். அது விதி விலக்கு.
கலவி என்பது ஐந்து புலன்களுக்கும் இன்பம் அளிப்பது. கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, மேலும் உற்று பெறும் இன்பம் அது.
மீள்பார்வைக்காக நாம் முன்பு சிந்தித்த ஒரு குறள் – காண்க 19/02/2022 (358)
“கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.” --- குறள் 1101; இயல்- கலவியல்; அதிகாரம் – புணர்ச்சி மகிழ்தல்
இவ்வாறு இன்பம் தரும் ஒரு செயல் இயற்கையாக அமைந்தால்தானே அதில் முழு இன்பம் கிடைக்கும்?
உணர்ச்சியில்லா உடலைக்கூடி இன்பம் கிடைப்பது எப்படி சாத்தியம்? அதுவும், அந்த உடலில் உயிரும் இல்லை என்றால்?
இதோடு நிறுத்தவில்லை நம் பேராசான்.
அந்த உயிரற்ற உடலும் ஒரு இருட்டறையில் இருக்கின்றதாம். என்ன ஒரு கொடுமை? அதைக் கூடி என்ன இன்பம் வேண்டி இருக்கின்றது உனக்கு என்று உறுமுகிறார் நம் பேராசான். இப்படியான ஒரு அருவருக்கத்தக்க ஒரு உவமையைப் பயன்படுத்தி இடித்துக் கூறுகிறார்.
“பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீ இ அற்று.” --- குறள் 913; அதிகாரம் – வரைவின் மகளிர்
முயக்கம் = முயன்று கூடுவது; ஏதில் பிணம் = எந்த உணர்ச்சியும் இல்லாப் பிணம்; பொருட்பெண்டிர் முயக்கம் பொய்ம்மை = பொருளை மட்டும் விரும்பும் பெண்களைத் தழுவுவது பொய்ம்மை, அதாவது அதில் இன்பம் இல்லை அது waste. இருட்டறையில் ஏதில் பிணந்தழீஇ அற்று = (அது எது போன்றது என்றால்) ஒரு இருட்டு அறையில் எந்த உணர்வுமில்லா பிணத்தைக் கூடினாற் போல.
இதற்கும் மேல இடிக்க முடியுமான்னு தெரியலை. கடந்த மூன்று பாடல்களில் மெதுவாக தொடங்கி மூன்றாவது குறளில் ஓங்கி ஒரு அடி போட்டிருக்கிறார்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com )
Comments