கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்று ... 1101
Updated: Feb 20, 2022
19/02/2022 (358)
மைத்தீட்டிய கண்ணிலே ஒரு குறிப்பு இருக்கிறது என்று குறிப்பு அறிவுறுத்தலை ஆரம்பித்தார் நம் பேராசான், மணிமாலை அணிந்து மறைத்திருக்கிறாள் என்றார், இன்னும் சிறிது நேரத்தில் மலரும் மலரில் உள்ள வாசம் போல தன் குறிப்பினை ஒளித்து வைத்திருக்கிறாள் என்றார் …
உண்மையிலேயே, நம் பேராசான் ஒரு கற்பனைக் களஞ்சியம்தான். அவருக்கு பிடித்த உவமைகளில் ஒன்று ‘தொடி’. அதாங்க ‘வளையல்’. வளைந்து இருப்பதனால் வளையல். வளைப்பதனாலும் அதற்கு வளையல்.
1964ல் வந்த படகோட்டி என்ற திரைப்படத்தில் கவிஞர் வாலி அவர்களின் ‘கல்யாணப் பொண்ணு…” பாடல்:
“கல்யாணப் பொண்ணு, கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல் ---
அத்தானின் காதல் முத்தாமல் இருந்தால் பித்தாக செய்யும் வளையல் சில சித்தானை உடம்பு வத்தாமல் இருந்தால் ஒத்தாசை செய்யும் வளையல் அன்ன நடை பின்னி வர சின்ன இடை மின்னி வர முன்னாடி வரும் வளையல் …” அவனின் காதல் பித்தாக இருக்கிறது. பல குறிப்புகளைக் காட்டுகிறாள். அவனுக்கு பித்தம் அதிகரிக்கிறது. அதற்கு மருந்து அவளிடம்தான் இருக்கிறது.
அவன் ஏற்கனவே, களவில் இருந்த போதே சொல்லியிருக்கிறான்:
அதாவது, சிலவற்றைக் காணும் போது இன்பம், சிலவற்றை முகரும் போது இன்பம், கேட்கும் போது ஒரு இன்பம், உண்ணும் போது ஒரு இன்பம், உணரும் போது ஒரு இன்பம் இப்படி ஐந்து புலன்களினாலும் இன்பம் வரும்.
ஒரு கற்பனை: மழைச் சாரல் விழ, பச்சைப் பசேல் என்றுஇருக்கும் தோட்டதைப் பார்த்துக் கொண்டே, சன்னல் ஓரமாக அமர்ந்து ஒரு சூடான காபியைக் குடித்தால் எப்படி ஒரு இன்பம் இருக்கும். தனித் தனியான புலன் இன்பங்களை விட சில புலன்கள் கூட்டாக இன்பம் தந்தால்? மிகப் பெரிய இன்பம் அல்லவா?
ஐந்து புலன்களுமே இணைந்து இன்பம் தந்தால் அது ‘பேரின்பம்’ என்றுதானே அழைக்கப் படவேண்டும்? அதைப் போய் ‘சிற்றின்பம்’ என்று அழைக்கிறார்கள்!
ம்ம். அன்றைக்குச் சொன்னது கவனத்திற்கு வருகிறதாம் அவனுக்கு:
“கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.” --- குறள் 1101; இயல்- கலவியல்; அதிகாரம் – புணர்ச்சி மகிழ்தல்
ஒண்தொடி = ஒளி பொருந்திய வளையல்
தொடருவோம் நாளை.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
