top of page
Search

பொருள்மாலை யாளரை ... 1230, 1229, 26/03/2024

26/03/2024 (1116)

அன்பிற்கினியவர்களுக்கு:

குழலோசை அழல் போலும் என்றாள்! அதுவே என்னைக் கொல்லும் படையாகவும் ஆகுமோ என்றொரு கேள்வியையும் எழுப்பினாள். ஆனால், அவளின் உயிர் நிலை கலங்கியதே தவிர நிலைத்தே இருக்கிறது. அது கண்டு அவளுக்கு ஆச்சரியமாகவும் இருக்கிறது.

 

அவர் பொருளைத் தேட என்னை விட்டுப் பிரிந்தபோது பிரியாத என் உயிர், மருட்டும் இந்த மாலைப் பொழுதினில் போய்விடுமோ?

 

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை

மாயுமென் மாயா உயிர். – 1230; - பொழுது கண்டு இரங்கல்

 

பொருள் மாலையாளரை = பொருளைத் தேடுவதே ஒரே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் என்னவரை;  உள்ளி மாயா உயிர் = எண்ணி, அவர் பிரிந்து சென்ற பொழுதே என்னைவிட்டுப் பிரியாத இந்த உயிர்;  மருள் மாலை மாயும் என் = மருட்டும் இந்த மாலைப் பொழுதினில் போய்விடுமோ?

 

பொருளைத் தேடுவதே ஒரே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் என்னவரை எண்ணி, அவர் பிரிந்து சென்ற பொழுதே என்னைவிட்டுப் பிரியாத இந்த உயிர், மருட்டும் இந்த மாலைப் பொழுதினில் போய்விடுமோ?

 

உயிரைப் பிடித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறுகிறாளோ? உலகமே அவளுக்கு எதிராக இருப்பதாகவும் கற்பனை செய்கிறாள்.

 

பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு

மாலை படர்தரும் போழ்து. – 1229; - பொழுது கண்டு இரங்கல்

 

படர் தரும் மாலை போழ்து மதி மருண்டு = எனக்குத் துன்பத்தைத் தரும் இந்த மாலைப் பொழுதில் என் அறிவு மயங்குகிறது; பதி மருண்டு பைதல் உழக்கும் = இந்த உலகமும், எனக்கு ஆதரவாக நிற்காமல், மாலைப் பொழுதில் மயங்கி, கண்ணை மூடிக் கொண்டு துன்பத்தை இழைக்கிறதே!

 

எனக்குத் துன்பத்தைத் தரும் இந்த மாலைப் பொழுதில் என் அறிவு மயங்குகிறது. இந்த உலகமும், எனக்கு ஆதரவாக நிற்காமல்,மாலைப் பொழுதில் மயங்கி கண்ணை மூடிக் கொண்டு, துன்பத்தை இழைக்கிறதே!

 

இவ்வாறெல்லாம் மாலைப் பொழுதினைக் காய்ச்சி எடுக்கிறாள்.

 

அடுத்த அதிகாரமாக உறுப்பு நலன் அழிதல். என்ன சொல்லப் போகிறாள் என்று பார்ப்போம்.

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.




 
 
 

Comments


©2021 by தினமும் திருக்குறள்.

bottom of page