17/06/2021 (115)
‘வாயில இருக்கு வழி’ ன்னு ஒரு பழமொழி இருக்கு. இது ஏதோ தெரியாத ஊருக்கு போறதுக்குன்னு நாம நினைச்சுட்டு இருக்கோம்.
இது ஓரளவுக்குத்தான் உண்மை. இதன் உள்பொருள் என்னன்னா எல்லாவற்றுக்கும் அதுதான் வழி. அதனாலேதான் அதுக்கு ‘வாய்’ (வாயில்)ன்னு பெயர் வைத்திருக்காங்க.
வாயில் இருந்து வருகின்ற வார்த்தைகளுக்கு ரொம்பவே சக்தியிருக்கு. அதனாலேதான் நம் தெய்வப்புலவர் தொல்காப்பியத்திலே இப்படி சொல்கிறார்.
“நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப” --- தொல்காப்பியம்
வாக்குச் சுத்தம் ரொம்பவே முக்கியம். வாக்கிலே நான்கு குற்றங்கள் நிகழலாமாம். அவையாவன:
1. பொய்
2. புறங்கூறல்
3. கடுஞ்சொல்
4. பயனில கூறல்
வாக்குப்பற்றி நம்ம வள்ளுவப்பெருமான் குறள் முழுக்க சொல்லியிருக்காரு.
இல்லறவியலில் இனியவைகூறல் (10), பயனிலசொல்லாமை (20), துறவறவியலில் வாய்மை (30), பொருட்பாலில் சொல்வன்மை (65) இப்படி குறள் முழுக்க ‘வாக்கு’ தான். நீங்க நினைக்கறது சரிதான். குறளே நிறைமொழி மாந்தர் வாக்குதானே!
அது சரி, இன்பத்துப்பாலில் வாக்கு இருக்கா? இருக்கே, அங்க நம்ம பேராசான் அப்படியே தட்டைத்(பிளேட்டை) திருப்பி போடறார். பொய் நல்லா சொல்லு பிழைத்துக்கலாம். அதுவும் ரொம்ப தூக்கலா இருந்தா இன்னும் ஜோர். Sample க்கு (உதாரணத்துக்கு) ஒன்னே ஒன்னு அதைப் பார்த்துட்டு நம்ம திரும்ப வந்துடலாம். கொஞ்சம் கிளுகிளுப்பு வேண்டாமா?
“பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.” குறள் 1121அதிகாரம் - காதற்சிறப்பு உரைத்தல்
பாலொடு = பால்கூட; தேன் = தேன்; கலந்தற்றே = கலந்தாமாதிரி (இருக்காம்); பணிமொழி = மென்மையாய் பேசுகின்ற கொஞ்சு மொழியாளின்; வால் = தூய்மையான; எயிறு = ஈறில், வாயில்; ஊறிய நீர் = சுரந்த நீர்.
இன்னுமொரு அதிகாரம் நலம்புனைந்துரைத்தல் (112) இருக்கு. பார்த்தீங்களா ‘புனைந்து’ – முழுக்க பொய்தான். எப்படி நம்ம பேராசான்? பொய்யை எங்கே பயன்படுத்தனுமோ அங்கே பயன்படுத்துவோம்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன். உங்கள் அன்பு மதிவாணன்
Comentarios