02/05/2021 (105)
இன்றைய தினம் நல்லதாக விடியட்டும்
எருமைக் கடான்னு வையறாங்க ஐயா, நான் எருமையான்னு நம்மாளு, ஆசிரியர் கிட்ட கேட்டார்.
ஆசிரியர்: அப்படியா, அவங்களுக்கு தெரியாது எருமையின் பெருமை. எதைப்பற்றியும் உணர்ச்சிவசப்படாதிருப்பதால் - அது ஒரு ஞானி;
நினைத்ததைச் செய்வதால் – அது ஒரு யோகி;
ஓய்வு எடுக்கும் போது – அது ஒரு போகி;
மழையோ, வெயிலோ செய்யும் வேலையை தொடர்வதால் – அது ஒரு கர்மி;
அதை ‘அது’ ன்னு சொல்லவே கூச்சமா இருக்கு.
பல ‘அது’களாய் இருக்கும் வாய் சொல் வீரர்களுக்கு நடுவே மாட்டிக்கொண்ட வீரன் தான் எருமையார்;
தடுத்ததையெல்லாம் தட்டிக்களையும் வல்லமை கொண்டவர் நம் எருமையார்;
காடோ, மேடோ, கழனியோ, கரடோ எடுத்த கால்களை முன் வைக்கும் வல்லவர் அவர்.
உயர்வுக்கு உவமை சொல்லும் போது எப்போதும் உயர்ந்ததை சொல்லனும் அது தான் மரபு.
வாழ்க்கையில் ஆயிரம் இடர்பாடுகள் வரலாம், அதையெல்லாம் சமாளிச்சு நடந்தால் அந்த இடர்பாடுகள் இருந்த இடம் தெரியாம போயிடும்.
நம்ம வள்ளுவப்பெருமானுக்கு அதுக்கு ஒரு உவமை சொல்லனும்னு நினைச்சார். என்ன சொன்னார் தெரியுமா? அவருக்கு வேற யாரும் நினைவுக்கு வரலை நம்ம எருமையாரைத் தவிர! அழகான தமிழில் ‘பகடு’ என்ற சொல்லைப் போட்டு நம்மை சொடுக்கறார். அவரைப் பார், பயனின்னு அறிவுரை சொல்கிறார் நமக்கு. இதோ அந்த குறள்:
“மடுத்தவாய் எல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.”---குறள் 624; அதிகாரம்–இடுக்கணழியாமை
மடுத்த = தடுத்த;வாய் = வழி/இடம்; எல்லாம் = எதுவானாலும்; பகடு = எருது/கடா; அன்னான் = போல இருப்பவனுக்கு; உற்ற இடுக்கண் = வந்த துன்பம்; இடர்ப்பாடு உடைத்து =அந்த துன்பம் தூள் தூளாயிடும்.
ஜெயித்தாலும் தோற்றாலும் அந்த ‘அது’க்கள் எதாவது சொல்லிட்டுத்தான் இருக்கும். நீ உன் வழியிலேயே போயிட்டு இரு. ஒரு நாள் உலகம் உன்னை அன்னாந்துப் பார்க்கும். அதைப் பார்க்க உனக்கு நேரம் இருக்காது! தொடர்ந்து செல். இன்றைய தினம் நல்லாதாக விடியட்டும்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comentários