26/03/2022 (393)
நமது மனம் இப்படி, அப்படி சில சமயம் அலை பாயும். அப்போது, நம்மைச் சுற்றியிருக்கும் இனம் ஆறுதல் அளிக்கும், வழி நடத்தும், ஒழுங்கு படுத்தும்.
அதாவது, மனதால் முடியாதது இல்லை என்றாலும்கூட இனநலம் அதற்கு வலிமை சேர்க்கும். அதனால்தான், நாம் நல்ல உள்ளங்களோடு உறவாடுவது, சேர்ந்திருப்பது மிகவும் அவசியமாகின்றது. பெரியவர்களைத் துணைக்கு அழைப்பது அவசியமாகிறது.
இனநலம், இம்மைப் பயனைமட்டும் அல்லாமல், அழியாப் புகழையும், மறுமைப் பயனையும் உறுதி செய்யுமாம் சொல்கிறார் நம் பேராசான்.
மீள்பார்வைக்காக:
குறள் 457ல் எல்லாப் புகழும் தரும் என்றார்.
“மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.” --- குறள் 457; அதிகாரம் – சிற்றினஞ்சேராமை
குறள் 458ல் உயர்வும், பெருமையும் தரும் என்பதைக் குறிப்பிட்டார்.
“மன நலம் நன்குடையர் ஆயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப்பு உடைத்து.” --- குறள் 458; அதிகாரம் – சிற்றினம் சேராமை
இக் குறள்களைத் தொடர்ந்து மேலும் சொல்கிறார்:
“மனநலத்தின் ஆகும் மறுமை மற்று அஃதும்
இனநலத்தின் ஏமாப்பு உடைத்து.” --- குறள் 459; அதிகாரம் – சிற்றினம் சேராமை
மனமது செம்மையாக இருந்தால் இம்மை, மறுமைப் பயன்கள் கிடைக்கும்; இருந்தாலும், இனநலம் அதை மேலும் உறுதிப் படுத்தும், வலிமை சேர்க்கும்.
மனநலத்தின் ஆகும் மறுமை = மனமது செம்மையாக இருந்தால் இம்மை, மறுமைப் பயன்கள் கிடைக்கும்; மற்று அஃதும் இன நலத்தின் ஏமாப்பு உடைத்து = இருந்தாலும், இனநலம் அதை மேலும் உறுதிப் படுத்தும், வலிமை சேர்க்கும்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments