top of page
Search

மன நலம் நன்குடையர் ... குறள் 458

18/03/2022 (385)

G U Pope (ஜி. யு. போப்) என்கிற பெருமகனார் தனது சிறு வயதிலேயே தமிழ் கற்றுக்கொள்கிறார். நோக்கம்: தான் சார்ந்துள்ள கிறுஸ்துவ மதத்தை தமிழகத்தில் பரப்புவது. தமிழின் பால் ஈர்க்கப்பட்டு தமிழிலேயே மூழ்கி விடுகிறார்.


தனது 17ஆவது வயதில் தொடங்கிய தமிழின் தொடர்பு அவரின் இறுதிக்காலம் வரைத் தொடர்கிறது. திருக்குறள், நாலடியார், தமிழ் இலக்கணம் இப்படி பல நூல்களை மொழி பெயர்த்து பதிப்பிக்கிறார்.


அவரது magnum opus (ஆகச் சிறந்தப் படைப்பு) திருவாசக மொழிபெயர்ப்பு. அதை, தனது 80ஆவது பிறந்தநாளில் நிறைவு செய்கிறார். திருவாசக வரிகளை தனது மடல்களில் குறிப்பிடாமல் அவர் எழுதுவது இல்லையாம்.


அவரின் தடம், மாறுவதைக் கண்ட கிறுஸ்துவச் சபை அவரிடம் விசாரனை செய்கிறது. அவர் தனது திருவாசகத்தை எடுத்துச் சொல்கிறார். கண்களிலே கண்ணீர் புரள!


அதைக் கேட்டுக் கொண்ட சபை, இவ்வளவுக்கும் பிறகு அவர் நம் சபையில் நீடிப்பதே அவர் நமக்கு செய்யும் தொண்டு என்று எண்ணி அவரை அப்படியே விட்டு விடுகிறது.


அவர் இங்கு இருந்தபோது, மதம் மாறிய உயர் வகுப்பினர் சிலர், தங்களுக்கு தங்கள் உயர் சாதிக்கு ஏற்றார்போல் ஒரு சபை வேண்டும் என்று கேட்கிறார்கள். அதை மறுத்து அவர் சபையில் இருந்தும், அந்த ஊரிலிருந்துமே வெளியேறுகிறார் அப் பெருமகனார்.


சரி, இந்தக் கதை இப்போது எதற்கு என்று கேட்கிறீர்களா? அதாவது நம் தமிழின் பெருமதிகளை நாம் கவனிக்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம்.


‘ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கும்’ பல வாசகங்கள் தமிழிலே கொட்டிக் கிடக்கின்றன. காலால் இடறிவிட்டு கடுகியே விரைகிறோம், பணக்கார விட்டுப் பிள்ளைகள் செய்வதுபோல!


சரி, நாம் குறளுக்கு வருவோம். மாணிக்க வாசகப் பெருமான் இறைவனை அடைய, அதாவது உள்ளொளிப் பெருக்க ஒரு வழி சொல்கிறார். எப்படி என்றால் அவ்வாறு முயல்பவர்கள் மத்தியில் போய் இருந்து கொள்வது என்கிறார்.


பேருந்துவிலோ, தொடர் வண்டியிலோ (bus, train) ஏறவேண்டும். கூட்டம் மிக அதிகமாக இருக்கிறது. அந்த கூட்டத்தின் மத்தியில் நாம் நின்று கொண்டால் அந்தக் கூட்டமே நம்மை நகர்த்தி உள்ளே அழைத்துச் செல்வது போல எங்கு செல்லவேண்டும் என்று நினைக்கிறோமோ அதை நோக்கி பயனிக்கும் கூட்டத்தினிடையே நாம் இருந்துகொள்ள வேண்டியது ஒரு வழியாம்.


சொல்வது யார் நம் பேராசான் திருவள்ளுவப் பெருந்தகை.


மன நலம் நன்குடையர் ஆயினும் சான்றோர்க்கு

இனநலம் ஏமாப்பு உடைத்து.” --- குறள் 458; அதிகாரம் – சிற்றினம் சேராமை


நமக்கு மனத்தின்மை இருந்தாலும் கூட, மேலும் உயரவேண்டும், இருப்பதையும் தக்கவைக்க வேண்டும் என்றால் தான் சார்ந்து இருக்கும் கூட்டம் அதை உறுதி செய்யும்


மன நலம் நன்குடையர் ஆயினும் = நமக்கு மனத்தின்மை இருந்தாலும் கூட; சான்றோர்க்கு இனநலம் ஏமாப்பு உடைத்து = மேலும் உயரவேண்டும், இருப்பதையும் தக்கவைக்க வேண்டும் என்றால் தான் சார்ந்து இருக்கும் கூட்டம் அதை உறுதி செய்யும்


கும்பலில் கோவிந்தா போடுவதுகூட முக்கியம்தான் போல இருக்கு!


You're the average of the five people you spend the most time with – Jim Rohn


(நீங்கள் அதிக நேரம் செலவிடும் ஐந்து பேரின் சராசரியாகத்தான் நீங்கள் இருப்பீர்கள்.)


ஆங்கிலத்திலேயே சொல்லியாச்சு. இப்போ, நீங்க நம்பிதான் ஆகனும்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
11 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page