30/10/2023 (968)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
செய்யத்தகாதவைகளை நம்மிடம் மற்றவர்கள் செய்தாலும் கூட அதனால் வருந்தி அறமல்லாதவற்றைச் செய்யாமல் இருத்தல் நல்லது என்று நம் பேராசான் சொன்னதை நாம் சிந்தித்துள்ளோம். காண்க 19/06/2021 (117). மீள்பார்வைக்காக:
“திறனல்ல தன்பிறர் செய்யினும் நோநொந் தறனல்ல செய்யாமை நன்று.” குறள் 157; அதிகாரம் - பொறையுடைமை “உலகிலேயே மகிழ்ச்சியான மனிதர்” (The Happiest Man on Earth) என்ற தலைப்பில் தனது அனுபவங்களைப் புத்தகமாக வெளியிட்டு நிறை வாழ்வு வாழ்ந்த எடி ஜேக்கூ (Eddie Jaku), என்ன சொல்கிறார் என்றால் பொறுமை, ஒழுக்கம், உறுதி, நம்பிக்கை இவைகள்தாம் ஆயுதங்கள் என்கிறார்.
எதை வெல்ல?
தன்னுடைய வலிமையால், உள்ளச் செருக்கால், நம்மை நசுக்குபவர்களை வெல்ல! அவர் இவ்வாறுதான் ஹிட்லரை வென்றேன் என்கிறார். ஹிட்லரை வென்றேன் என்றால் நேரடியாக வெல்ல வேண்டும் என்பதில்லை!
ஹிட்லர் மண்ணுக்குள் புதைந்துவிட்டார். இருப்பினும், எடி ஜேக்கூ ஹிட்லரையும் கடந்து பல ஆண்டுகள் வாழ்வதும், பிறருக்குப் பயனுள்ளவராக இருப்பது என்பதும் ஒரு சாதனைதானே என்கிறார். இதுதான் அவரின் தகுதியால் வெல்லுதல்.
“மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தந்
தகுதியான் வென்று விடல்.” --- குறள் 158; அதிகாரம் – பொறையுடைமை
மிகுதியான் மிக்கவை செய்தாரை = வலிமையால், உள்ளச் செருக்கால் நம்மை நசுக்குபவர்களை; தாம் தம் தகுதியான் வென்று விடல் = தங்களுடைய பொறுமை முதலான குணங்களைக் கொண்டு வென்று விடுக.
வலிமையால் மற்றும் உள்ளச் செருக்கால் நம்மை நசுக்குபவர்களைப் பொறுமை முதலான குணங்களைக் கொண்டு வென்று விடுக.
பொறுமையாக இருந்தால் மனம் சிந்திக்க வழி பிறக்கும். பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும். பாதை தெரிந்தால் பயணம் தொடரும் …
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Kommentare