top of page
Search

வருமுன்னர்க் காவாதான் ... குறள் 435

25/03/2021 (67)

தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

வள்ளுவப்பெருந்தகை அதிகாரங்களை கல்வி(40), கல்லாமை (41), கேள்வி(42), அறிவுடைமை(43) என்று முறைப்படுத்தி அதுக்கு அடுத்ததா ‘குற்றங்கடிதல்’ங்கிற 44 ஆவதுஅதிகாரத்தை அமைத்திருக்கார்.

பொருட்பாலில் மூன்று இயல்கள். அவையாவன: அரசியல், அங்கவியல் மற்றும் ஒழிபியல்.


அரசியலில், அக்கால மன்னர் ஆட்சியின் முறைமையை சொல்லத் துவங்கி, அதில் அனைவருக்கும் பொருந்தும் வகையிலே தலைமைப் பண்புகளை 25 அதிகாரங்களில் (39 லிருந்து 63 வரை) விரிக்கிறார்!


அதிலே 44 வது அதிகாரமாக வருவது ‘குற்றங்கடிதல்’. எல்லாமே முதலிலே மனதிலே தான் ஏற்படுது. மனதிலே தோன்றும் குற்றங்கள் ஆறு வகையா வகைப்படுத்தறாங்க. அஃதாவது, காமம், கோபம், கடும் பற்றுள்ளம், மானம், உவகை, மதம். இதை ‘பகைவர்கம்’ ன்னு சொல்றாங்க. (இவற்றை பின்னாடி பார்க்கலாம்னு ஆசிரியர் சொல்லிட்டாரு. தப்பிச்சுட்டோம் இப்போதைக்கு!)


ஆசிரியர்: இன்றைக்கு என்ன குறள்?


நம்மாளு: ஐயா 435 வது குறள் …


நன்று. எளிமையான குறள் தான். அதாவது, குற்றம் நடக்க போவதற்கு முன்பே, அதை தடுக்காம விடுவது எது போல என்றால், நெருப்பு பரவும் போது வைக்கோல்போரை எடுத்து பத்திரப்படுத்தாம அப்படியே போட்டு வைக்கிறா மாதிரி!


“வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்.” ---குறள் 435; அதிகாரம்- குற்றங்கடிதல்


வருமுன்னர்க் காவாதான் = குற்றம் வருவதை தடுக்காமல் இருப்பவன்; வாழ்க்கை = வாழ்க்கை; எரிமுன்னர் = நெருப்புக்கு முன்னாடி; வைத்தூறு = வைக்கோப்போர்; வை = வைக்கோல்; தூறு = போர் (கட்டு); போலக் கெடும் = பொசுங்கிடும்


குற்றம் சின்னதாயிருந்தாலும் அதன் விளைவு மிகப்பெரியதாயிருக்கலாம்!

ஆனால், மனதிலே நல்லதொரு நெருப்பை நாளும் வைத்தால் குற்றங்கள் ஒழியும். நான் சொல்லலை. என்னருமை மகாகவி சொல்றாரு:


அக்கினி குஞ்சொன்று கண்டேன் -- அதை அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்!

வெந்து தணிந்தது காடு;

தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ? --- மகாகவி பாரதி


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.

உங்கள் அன்பு மதிவாணன்




11 views0 comments
Post: Blog2_Post
bottom of page