வேட்பன சொல்லி வினையில ... குறள் 697
19/10/2021 (238)
நமது தமிழ் இலக்கியங்களில் அந்தாதி என்று ஒரு வகை இருக்கிறது. அந்தம் + ஆதி = அந்தாதி என்பது நமக்குத் தெரிந்திருக்கும்.
அந்தாதி இரண்டு வகை: அந்தாதி செய்யுள்; அந்தாதி தொடை
அந்தம் என்றால் ‘கடைசி’, ‘முடிவு’; ஆதி என்றால் ‘முதல்’, ‘துவக்கம்’ என்று பொருள்படும்.
ஒரு பாடலில் இறுதியில் உள்ள எழுத்தோ, அசையோ, சீரோ, அடியோ அடுத்து வரும் பாடலின் முதலாக அமையும்படி பாடுவதுதான் அந்தாதி செய்யுள்.
அதே போல இரண்டு அடிகளுக்கு இடையே அமைவது அந்தாதி தொடை.
“வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்
கணவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்க்கனைகள் … “ --- கவியரசர் கண்ணதாசன், மூன்று முடிச்சு (1976)
கவியரசரின் அருமையான பாடல். பாடல் முழுதும் அந்தாதி தொடைகளாலே அமைத்திருப்பார்.
சரி, இப்போ எதுக்கு இதெல்லாம்? குறளைச் சொல்லுவியான்னு கேட்கறீங்களா, குறளிலும் அந்தாதி வருவதாலே சொல்லனும் தோன்றியது. இது நிற்க.
குறள் 696 ஐ ‘வேட்பச் சொலல்’ என்று முடித்திருந்தார். அடுத்த குறளில் ‘வேட்பன சொல்லி’ என்று தொடங்குகிறார். அந்தாதியை கவனிங்க.
நம்ம பேராசானுக்கு ஒரு ஐயம், அதாங்க ஒரு சந்தேகம் வந்துட்டுது. விரும்புவதை சொல்லுன்னு சொன்னதாலே கண்டதையும் சொல்லிடுவாங்களோன்னு ஒரு பயம். அதனாலே, அவசரம், அவசரமாக தொடர்கிறார்.
விரும்புவதைச் சொல்லுங்க ஆனால் வேலைக்கு ஆகாதது, பயனில்லாதது போன்றவைகளை எப்போதும் சொல்லாதீங்க; தலைமை விரும்பினால்கூட சொல்லாதீங்க என்கிறார்.
“வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்.” --- குறள் 697; அதிகாரம் – மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
வேட்பன சொல்லி = (பயனுள்ளதை) தலைமை விரும்பும் போது சொல்லி; எஞ்ஞான்றும் வினையில கேட்பினும் சொல்லா விடல் = எப்போதும், பயன் இல்லாததை (தலைமையே விரும்பி) கேட்டாலும் சொல்லாதீங்க.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
