04/02/2021 (18)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
எண்ணங்களை உயர்த்தினால் வாழ்க்கை உயரும். அந்த எண்ணங்களை உறுதியாகவும், உணர்வுபூர்வமாகவும் மனசில காட்சிப் படுத்தணும்னு நம்மாளுகிட்டே அப்படியே தொடர்ந்தார்.
இதைத்தான் மேல் நாட்டு அறிஞர்கள், visualization, Law of attraction ன்னு சொல்றாங்க. Secret ன்னு ஒரு ஆங்கிலப் படம் (ரொம்பவே பிரபலமாயிடுச்சு. தமிழில்கூட மொழி பெயர்த்து இருக்காங்க) அதிலே வருகிற கருத்துகளும் இதே.
நிற்க.
ஏற்கெனவே, திருக்குறள்களின் மத்தியில் ஒளித்து வைத்த குறள் நமக்குத் தெரியும். முதல்லேயே பார்த்தோம்.
“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்.” --- குறள் 666; அதிகாரம் – வினைத்திட்பம்
நம்மாளு: அய்யா, திண்ணியர் என்றால் உறுதியுடையவர்ன்னு பார்த்தோம்.
வ.பெ: அது கூடவே வினைத்திட்பம் உடையவரென்ற பொருளையும் சேர்த்துக்கணும்.
நம்: ‘வினைத்திட்பம்’ னா செயலில் தேர்ச்சின்னு எடுத்துக்கலாமா அய்யா?
வ.பெ: சரிதான், ஆனா அதிலே ஒரு நுட்பம் இருக்கு. அதுக்குதான் குறள் 661ஐப் பார்கணும்.
“வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றவை எல்லாம் பிற” ---குறள் 661; அதிகாரம் – வினைத்திட்பம்
பொதுவா, ஒரு செயலின் வெற்றிக்குத் தேவையானது: கருவிகளில் தேர்ச்சி (செயலைச் செய்ய), பாதுகாப்புகள் (தற்காத்துக்கொள்ள – Insurance மாதிரி), நட்பு (கை கொடுக்க). இவையெல்லாம் முக்கியம்தாம். ஆனா, அதைவிட முக்கியம் என்ன தெரியுமா? அதுதான் ‘மனத்திட்பம்’ – மனத்தில் உறுதி.
எண்ணிய எண்ணியாங்கு எய்த முதல் தேவை –‘ மனத்தில் உறுதி’ மீதியெல்லாம் அப்புறம்தாம். அதைத்தான் ‘மற்றவைஎல்லாம் பிற’ ன்னு வருது.
“Everything is created twice, first in the mind and then in reality.” – Robin Sharma
(எல்லாம் இருமுறை உருவாகிறது - ஒன்று நினைவிலும், மற்றொன்று உண்மையிலும்)
நன்றி. மீண்டும் சந்திப்போம் வேறு ஒரு குறளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்

Comments