வியவற்க எஞ்ஞான்றும் ... 439
- Mathivanan Dakshinamoorthi
- Apr 9, 2021
- 1 min read
09/04/2021 (82)
பெரியோரை வியத்தலும் இலமே,சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
குற்றங்கடிதல் அதிகாரத்திலே நாம இதுவரை பார்க்காத ஒரு குறளைத்தான் இன்றைக்கு பார்க்கப்போறோம்.
செருக்குன்னு ஒரு குற்றம், அதை ‘மதம்’, ‘மன மயக்கம்’ என்றும் சொல்லலாம். அது ஒரு விதமான போதையில் ஆழ்த்தும். அது என்ன பன்ணுமாம், வெற்றிக்கு காரணமாகிய வலிமை, காலம், இடம் போன்றவையை ஒதுக்கிட்டு தன்னால் தான் எல்லாம்னு வியந்து நிற்குமாம். அப்படியே நின்றால் கூட பரவாயில்லை. நம்மால முடியாதது ஏதுமில்லைன்னு நினைச்சுட்டு பல அறத்துக்கு மாறன செயல்களிலே ஈடுபடுமாம். ஒரு தலைமை அங்கேதான் கவனமா இருக்கனும்னு நம்ம வள்ளுவப்பெருந்தகை சொல்கிறார் இந்த குறளில்:
“வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி பயவா வினை.” --- குறள் 439; அதிகாரம் - குற்றங்கடிதல்
தன்னை = நம்மை நாமே; எஞ்ஞான்றும் = எக்காலத்திலும்; வியவற்க = வியந்து புகழ்ந்து கொள்ள வேண்டாம்; நன்றி பயவா வினை = நன்மை தாராத, பழி பாவங்களை பயக்கும் அறமற்ற செயல்களை; நயவற்க = மனத்தாலும் விரும்ப வேண்டாம்.
‘வியத்தல்’ எப்பவுமே நம்மை அடிமை படுத்தும். ஒருவரைப் பார்த்து வியக்க ஆரம்பித்தால், (காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்) நம்ம ஆழ்மனசுல என்ன ஆகுது தெரியுங்களா, அவருக்கு ‘அது இருக்கு, இது இருக்கு அதானாலே அவராலே முடியுது’ எங்கிட்ட என்ன இருக்கு? என்னாலே முடியாதுன்னு ஒரு பதிவு உருவாகுதாம். உளவியல் அறிஞர்கள் சொல்றாங்க.
வியத்தல் கூடாதுன்னா அலட்சியம் பண்ணலாமா? அதுவும் கூடாதாம். அதை ஒரு பதிவாக எடுத்து நாம முயன்று பார்க்க தேவையானதான்னு ஆய்ந்து தேவையென்றால் முயன்று பார்க்கலாமாம்.
அதனாலேதான் நம்ம கணியன் பூங்குன்றனார் நமக்கு தெரிந்த ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்; என்ற பாடலை இப்படி முடிக்கிறாரோ?
“யாதும் ஊரே யாவரும் கேளிர் …
…
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.” – புறநானூறு 192
பெரியோரையே வியத்தல் கூடாது என்றால், நம்மை நாமே வியத்தல் ‘சாரி கொஞ்சம் ஓவர்’ ரகம் மாதிரி தெரியலை? ஆகவே வியவற்க!
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்

Comments