top of page
Search

வீழப் படுவார் கெழீஇயிலர் ... 1194, 1195, 08/03/2024

08/03/2024 (1098)

அன்பிற்கினியவர்களுக்கு:

அவர் வருவார். இன்பத்தில் திளைப்பேன் என்ற அவளின் மன ஓட்டத்தை எடுத்துக் கூறிய தோழிக்கு மறுத்துக் கூறுகிறாள் அவள்.

 

நீ ஏதேதோ உன் கற்பனையில் கூறுகிறாய். எனக்குதான் தெரியும். அவர் நல்லவர் என் கிறாய், வல்லவர் என்கிறாய். நான் கூட அவ்வாறுதான் நினைக்க விரும்புகிறேன். இருப்பினும், இவ்வளவு நாள் ஆகியும் அவர் திரும்பி வராமல் இருப்பதைப் பார்க்கும்போது, ஒரு வேளை அவர் என்னை விரும்பாமல் சென்றுள்ளாரோ என்று ஐயமும் இருக்கிறது. இதற்கெல்லாம் கொடுத்து வைக்க வேண்டுமோ?

 

வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்

வீழப் படாஅர் எனின். – 1194; - தனிப் படர் மிகுதி

 

கெழீ = நட்பு, விருப்பம், அன்பு; கெழீ இலர் = அன்பில்லாதவர்; கெழீஇ, படாஅர் – அளபெடை;

 

தாம் வீழ்வார் வீழப்படாஅர் எனின் = தம்மால் முழுவதுமாகக் காதலிக்கப்படுபவர், அதே காதலோடும் அன்போடும் திரும்பித் தம்மைக் காதலிக்கத் தவறுபவர் ஆனால்; வீழப்படுவார் = தம்மால் காதலிக்கப் படுபவர்; கெழீ இலர் = அவர் எவ்வளவுதான் நல்லவர் என்று நாட்டார் சொன்னாலும் என்மட்டில் அவர் அன்பில்லாதவர் என்றே பொருள்.

 

தம்மால் முழுவதுமாகக் காதலிக்கப்படுபவர், அதே காதலோடும் அன்போடும் திரும்பித் தம்மைக் காதலிக்கத் தவறுபவராக இருந்தால், தம்மால் காதலிக்கப்படுபவர் அவர் எவ்வளவுதான் நல்லவர் என்று நாட்டார் சொன்னாலும் என்மட்டில் அவர் அன்பில்லாதவர் என்றே பொருள். இல்லையென்றால் இந்நேரத்திற்கு அவர் திரும்பி வராமல் இருப்பாரா?

 

அவள் நிறுத்தவில்லை. மேலும் தொடர்கிறாள்.

 

நாம் காதலிப்பவர் நம்மை விரும்பாவிட்டால் எப்படி நன்மை செய்வார்? நான் தான் தவறாக அவர் என்னை முழுவதுமாகக் காதலிக்கிறார் என்று நினைத்துக் கொண்டேனா?

 

நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ

தாம்காதல் கொள்ளாக் கடை. – 1195; - தனிப் படர் மிகுதி

 

நாம் காதல் கொண்டார் = நம்மால் விரும்பப் படுபவர், இவர்தாம் நமக்குத் துணை என்று நம்பி இருப்பவர்;  தாம் காதல் கொள்ளாக் கடை = அவர் தம்மட்டில் நம்மிடம் அதே அன்பைச் செலுத்தாமல் இருந்தார் என்றால்; நமக்கு எவன் செய்பவோ = உடனே விரைந்து வந்து என்னை அமைதிப்படுத்தும் அந்த அன்பான செயலை எப்படிச் செய்வார்? செய்யமாட்டார்.

 

நம்மால் விரும்பப் படுபவர், இவர்தாம் நமக்குத் துணை என்று நம்பி இருப்பவர், அவர் தம்மட்டில் நம்மிடம் அதே அன்பைச் செலுத்தாமல் இருந்தார் என்றால், உடனே விரைந்து வந்து என்னை அமைதிப்படுத்தும் அந்த அன்பான செயலை எப்படிச் செய்வார்? செய்யமாட்டார்.

 

இல்லை, இல்லை, என் மீது அவருக்கு அன்பு இல்லை!

 

இரு கை தட்டினால்தான் ஓசை எழும் என்பதுபோல இரு பக்கமும் அன்பிருந்தால்தான் இனிக்கும் என்று மேலும் தொடர்கிறாள்.

 

நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Post: Blog2_Post

©2021 by தினமும் திருக்குறள்.

bottom of page