top of page
Beautiful Nature

குற்றம் இலனாய் ... 1025, 1024, 1026, 01/06/2024

01/06/2024 (1183)

அன்பிற்கினியவர்களுக்கு:

குடியை உயர்த்தும் செயலைச் செய்பவர்களுக்கு வெற்றி இயல்பாக வரும் என்றார். காண்க 19/03/2021, மீள்பார்வைக்காக:

 

சூழாமல் தானே முடிவெய்தும் தங்குடியைத்

தாழா துஞற்று பவர்க்கு. -1024;  – குடி செயல் வகை

 

மேலும் தொடர்கிறார்.

 

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்

சுற்றமாச் சுற்றும் உலகு. – 1025; - குடி செயல் வகை

 

குற்றம் இலனாய் =  மாசு மருவற்றவனாக; குடி செய்து வாழ்வானை = தம் குடியை உயர்த்தியே தீருவேன் என்று தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவனை; உலகு சுற்றமாச் சுற்றும் = இந்த உலகம் அன்புடன் சுற்றிச் சுற்றி வரும்.

 

மாசு மருவற்றவனாகத் தம் குடியை உயர்த்தியே தீருவேன் என்று தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவனை, இந்த உலகம் அன்புடன் சுற்றிச் சுற்றி வரும். அஃதாவது, அவனைப் போற்றி புகழ்வார்கள்.

 

உன்னை உயர்த்து உன் வீடு உயரும்; வீட்டை உயர்த்து நாட்டை உயர்த்தலாம்; குடியை உயர்த்து குலத்தை உயர்த்தலாம்; குலத்தை உயர்த்து உலகம் உயரும் என்பர்.

 

ஆண்மை என்றால் அஃது ஏதோ ஆண்களுக்கு மட்டுமே உரியது என்று மார்த்தட்டுகிறார்கள் சிலர். ஆண்மை என்றால் ஆளும் தன்மை (management) என்று நமக்குத் தெரியும்.

 

நல்லாண்மை என்றால் ஆளும் தன்மையில் உயர்ந்த ஆளும் தன்மை, சிறந்த ஆளும் தன்மை.

 

நம்மாளு: உயர்ந்த ஆளும் தன்மை என்றால் எதனைக் குறிக்கும்?

 

ஆசிரியர்: இல்லாண்மைதான் நல்லாண்மை. இல்லத்தை நன்றாக ஆளத் தெரிந்தவன்தான்  தம் குடியை நன்றாக வழி நடத்துவான் என்கிறார் நம் பேராசான்.

 

நல்லாண்மை என்ப தொருவற்குத் தான் பிறந்த

இல்லாண்மை ஆக்கிக் கொளல். – 1026; - குடி செயல் வகை.

 

நல்லாண்மை என்பது ஒருவற்கு = நல்லாண்மை என்று சிறப்பித்துக் கூறப்படுவது ஒருவர்க்கு; தான் பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல் = தான் பிறந்த குடும்பத்தையும் குடியையும் நன்றாக உயர்த்த வழி அறிந்து செயல்படுத்தி வெற்றி காண்பதே.

 

நல்லாண்மை என்று சிறப்பித்துக் கூறப்படுவது ஒருவர்க்குத் தான் பிறந்த குடும்பத்தையும் குடியையும் நன்றாக உயர்த்த வழி அறிந்து செயல்படுத்தி வெற்றி காண்பதே.

 

 

நீண்ட நெடிய பயணம் ஒவ்வொரு அடியாகத் தளராமல் எடுத்து வைப்பதனால்தான் இயலும்.

 

"The journey of a thousand miles begins with a single step.” - Lao Tzu

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.



ree

Comments


©2021 by தினமும் திருக்குறள்.

bottom of page