top of page
Beautiful Nature

சொல்லுக சொல்லிற் ... 200, 97, 24/01/2021

Updated: Aug 16

24/01/2021 (7)

100, 200…

நேற்றைய தினம், 100 வது குறளில் சொல்லில் இனிமை வேண்டும் என்று வலியுறுத்திய திருவள்ளுவப் பெருந்தகை, பயனை எங்கே வைத்தார் என்ற வினாவோடு பிரிந்தோம்.


திருவள்ளுவப் பெருந்தகை, ஒரு பொருளை எடுத்துக் கொண்டால் அதை நேர் முகமாகவும், எதிர்மறையாகவும் வலியுறுத்துவதை நாம் காண்கிறோம். (திருக்குறளின் அமைப்பு முறை இனிமையானது – பிறிதொரு சமயம் பேசுவோம்)


இனிமையாக மட்டும் பேசினால் போதாது, அதற்கு வலிமை, அதாவது பயன் வேண்டும். எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என தொல்காப்பியம் சுட்டுகிறது.


சொல்லில் பயனுள்ள சொல்லை மட்டுமே சொல்ல வேண்டும். பயனில் சொற்களைத் தவிர்க்க வேண்டும் என்பதை ஒரு குறளில் ஆணித்தரமாக இடித்து கூறுகிறார். அந்த குறள் தான் 200 வது குறள்.


“சொல்லுக சொல்லின் பயனுடைய சொல்லற்க சொல்லின் பயனிலாச் சொல்”--- குறள் 200; அதிகாரம் - பயனில சொல்லாமை


சொல்லில் இனிமையும், வலிமையும் இருந்தால் மட்டும் போதுமா? அதிலே உண்மையும் இருக்கவேண்டாமா? அதில் தீமை ஒளிந்திருக்கக் கூடாதல்லவா?


உள்ளத்தில்உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்” –என்கிறார் மகாகவி பாரதியார்


அக்கருத்தை எங்கே ஒளித்து வைத்துள்ளார் நமது திருவள்ளுவப் பெருந்தகை?


ree

அந்தக் குறள் இதோ:


நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று

பண்பின் தலைப்பிரியாச் சொல் - 97; இனியவை கூறல்


நயன் ஈன்று நன்றி பயக்கும் = இனியவை கூறலானது பல நன்மைகளை வாழும் காலத்தில் தந்து மேலும், இப்பூமிப் பந்திலிருந்து மறைந்துவிட்டாலும் பல இனிய நினைவுகளையும் நன்றி உணர்வையும் பிறரிடம் உருவாக்கும்; பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல் = பொருளால் பிறர்க்கு பயனையும் கொடுக்கும். எது என்று மீண்டும் சொல்கிறேன்: இனியவை கூறல் என்னும் பண்பிலிருந்து சற்றும் மாறுபடாத சொல்.


இனியவை கூறலானது பல நன்மைகளை வாழும் காலத்தில் தந்து மேலும், இப்பூமிப் பந்திலிருந்து நாம் மறைந்துவிட்டாலும் பல இனிய நினைவுகளையும் நன்றி உணர்வையும் பிறரிடம் உருவாக்கும். பொருளால் பிறர்க்கு பயனையும் கொடுக்கும். எது என்று மீண்டும் சொல்கிறேன்: இனியவை கூறல் என்னும் பண்பிலிருந்து சற்றும் மாறுபடாத சொல். எனவே இனியவை கூறல் ஓர் அறம்.


நன்றி. மீண்டும் சந்திப்போம் வேறு ஒரு குறளுடன்.

உங்கள் அன்பு மதிவாணன்



ree

Comments


©2021 by தினமும் திருக்குறள்.

bottom of page