அச்சம் உடையார்க்கு ... குறள்கள் 534, 535, 435
27/11/2021 (277)
துணிந்தவனுக்கு துக்கம் இல்லை; பயந்தவனுக்கு பாயும் தொல்லை!
பொச்சாப்பு அளவிறந்த கோபத்தைவிட தீது என்று முதல் குறளிலும் (531), வறுமை எப்படி அறிவினைக் கொல்லுமோ அதுபோல பொச்சாப்பு ஒருவனின் புகழைக் கொல்லும் என்று இரண்டாவது குறளிலும் (532), பொச்சாப்பு இருந்தால் புகழ் கிடைப்பதற்கு வழியே இல்லை: இது உலகத்து உண்மை என்று மூன்றாவது குறளிலும் (533) சொல்லியிருந்தார் நம் பேராசான். மேலும் தொடர்கிறார்.
எவ்வளவுதான் பாதுகாப்புகள் இருந்தாலும், மனதிலே பயம் குடிகொண்டுவிட்டால் அவர்களைத் தேற்றுவது கடினம். அதுபோல பொச்சாப்பு உடையாருக்கு, கடமையை மறப்பவர்க்கு என்னதொரு நல்ல நிலைமை வாய்த்திருந்தாலும் அதனால் பயன் இல்லாமல் போகுமாம்.
வேற, வேற மாதிரி சொல்லி பொச்சாப்பின் தன்மைகளை படம் பிடித்துக்காட்டுகிறார்.
“அச்சம் உடையார்க்கு அரண் இல்லை ஆங்கில்லை
பொச்சாப்பு உடையார்க்கு நன்கு.” --- குறள் 534; அதிகாரம் – பொச்சாவாமை
அச்சம் உடையார்க்கு அரண் இல்லை = மனதிலே அச்சம் குடிகொண்டுவிட்டால் அவர்களுக்கு எந்த பாதுகாப்பு வளையங்களாலும் பயன் இல்லை; ஆங்கு = அதுபோல; பொச்சாப்பு உடையார்க்கு நன்கு இல்லை = கடமையை மறந்தவர்களுக்கு எவ்வளவுதான் நல்லவைகள் வாய்க்கப்பெற்று இருந்தாலும் அதுவும் இல்லாமல் போகும்
அடுத்து வரும் குறள்களில் ‘இழுக்கி’, ‘இழுக்கா’ என்ற சொற்களைப் பயன்படுத்துகிறார்.
“முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும்.” --- குறள் 535; அதிகாரம் – பொச்சாவாமை
முன்னுறக் காவாது இழுக்கியான் = வரப்போவதை முன்பே அறிந்து காக்காமல் பொச்சாப்பால் மறந்து இருப்பவன்; தன்பிழை = அவனின் தவறு; பின் ஊறு இரங்கி விடும் = பின்பு அந்தத் துன்பங்கள் வரும் போது வருத்தப்பட நேரிடும்.
இந்தக் குறள் எப்படி இருக்கு என்றால்
“வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.” --- குறள் 435; அதிகாரம் – குற்றங்கடிதல்
ரொம்ப நாளைக்கு முன்னாடி இந்தக் குறளைச் சிந்தித்தோம். (இங்கே காணலாம்)
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
