top of page
Search

எற்றென் றிரங்குவ செய்யற்க ... 467, 655

24/04/2023 (781)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

எச்சரிக்கை: நீண்ட பதிவு.

வினைத்தூய்மைக்கு நடுக்கற்ற காட்சி வேண்டும் என்றார் குறள் 654 இல். காண்க 23/04/2023.

இதனைத் தொடர்ந்து வரும் குறளில், ஒரு கருத்தைச் சொல்கிறார். அது ஆச்சரியமாக இருக்கிறது! இது நிற்க.


தெரிந்து செயல்வகை என்னும் அதிகாரத்தில் ஒரு குறளைப் பார்த்துள்ளோம். காண்க 28/10/2022 (604). மீண்டும் ஒரு முறை, சற்று விரிவாகப் பார்த்துவிட்டு வினைத் தூய்மைக்குள் நுழைவோம்.


எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு.” --- குறள் 467; அதிகாரம் – தெரிந்து செயல்வகை


கருமம் எண்ணித் துணிக = செய்ய வேண்டியச் செயல்களையும் அதனை திறம்படச் செய்து முடிக்கும் வழி முறைகளையும் எண்ணித் தொடங்குக; துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு = தொடங்கி வைத்துப் பின் சிந்தித்துக் கொள்ளலாம் என்பது குற்றம்.


செய்ய வேண்டியச் செயல்களையும் அதனை திறம்படச் செய்து முடிக்கும் வழி முறைகளையும் எண்ணித் தொடங்குக. தொடங்கி வைத்துப் பின் சிந்தித்துக் கொள்ளலாம் என்பது குற்றம்.


ஒரு செயலைச் செய்வதற்கு முன் சிந்திக்க வேண்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்பது அறிவுடையோர் செயல் அல்ல.


செயல்கள், அறத்தின் வழி, செய்யத் தக்கனதானா என்பதை முதலில் சிந்திக்க வேண்டும்.

வழிமுறைகள் என்பன கொடுத்தல், இன்சொல் சொல்லல், வேறுபடுத்துதல், ஒறுத்தல் என நால் வகைபடும். இவற்றை, சமஸ்கிருதத்தில் தான, சாம, பேத, தண்டம் என்பர்.


இவற்றையெல்லாம் எண்ணாது ஒரு செயலைத் தொடங்கினால் அந்தச் செயல் முற்றுப் பெறாமல் இடை நிற்கலாம்; நமக்கு இறுதியில் நன்மை பயக்காது என்று தெரிந்தபின்னும் இடை நிறுத்த முடியாமல் போகலாம்(புலி வாலைப் பிடித்தால் போல்); முடிந்தாலும் துன்பங்களைக் கொடுக்கலாம்...


எனவே எண்ணித் துணிக என்றார்!


நம்மாளு: சரி, வினைத் தூய்மையில் என்ன சொல்கிறார்?


அதாவது, ‘இப்படிப்பட்டச் செயலை நான் செய்துவிட்டேனே’ என்று நம்மை நாமே நொந்து கொள்ளும் விதமானச் செயல்களைச் செய்யாதீர்கள் என்று முதலில் சொல்கிறார்.

மேலும் தொடர்கிறார்: ‘செய்வானேல் மற்று அன்ன செய்யாமை நன்று’ என்கிறார்.


அதாவது, நம்மை நாமே நொந்து கொள்ளும்படி ஒரு செயலைச் செய்துவிட்டால், அதனை மீண்டும் செய்யாமல் இருப்பது நன்று என்பது போல பொருள் வருகிறது.


எண்ணித் துணிக என்றவர், அதுவும், வினையில் தூய்மையைக் குறித்து சொல்லிக் கொண்டிருக்கும் போது, இப்படி ஒரு அமைதியைக் (சமாதானத்தைக்) கொடுப்பாரா என்பதுதான் கேள்வி.


சரி, நாம் குறளைப் பார்ப்போம்.


எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்

மற்றன்ன செய்யாமை நன்று.” --- குறள் 655; அதிகாரம் – வினைத் தூய்மை


எற்று என்று இரங்குவ செய்யற்க = நான் செய்தது எப்படிப்பட்ட தவிர்க்க வேண்டியச் செயல் என்று வருந்தும் விதமாக இருக்கும் செயல்களைச் செய்யாதீர்கள்; மற்று செய்வானேல் = அன்றி, ஏதோ ஒரு காரணத்தால் அவ்வாறு தவிர்க்க வேண்டியச் செயலைச் செய்துவிட்டால்;


இது வரை பொருள் சொல்வதில் சிக்கல் இல்லை.


‘அன்ன’ என்பது எதைக் குறிக்கிறது? ‘அன்ன’ என்பது தவிர்க்க வேண்டியச் செயல்களைக் குறிக்கிறது என்று பெரும்பாலான அறிஞர் பெருமக்கள் பொருள் சொல்கிறார்கள்.


மீண்டும் செய்யாமை என்பதில் அவ்வளவு சிறப்பில்லை. ஏன் எனில் முன் செய்த செயலே எண்ணித் துணிந்ததுதான்!


பரிமேலழகப் பெருமான் வேறு மாதிரி சிந்திக்கிறார். ‘இரங்குவ’ என முன் சொல்லியிருப்பதால் ‘அன்ன’ என்பதற்கு அந்த இரங்கல்களைத்தான் சொல்கிறார் என்கிறார். இரங்கல் = வருத்தம்.


அப்போது என்ன பொருள்படுகிறது என்றால்: தவிர்க்க வேண்டியச் செயல் என்று வருந்தும் விதமாக இருக்கும் செயல்களைச் செய்யாதே. முதலிலேயே எண்ணித் துணி. எண்ணித் துணிந்தபின், ஏதோ ஒரு செயல் மாறாக அமைந்துவிட்டால் கழிவிறக்கம் கொள்ளாதே என்கிறார்.


நம்மை நாமே நொந்து கொண்டு புலம்பிக் கொண்டிருந்தால், எதிராளி மட்டுமல்ல எல்லோரும், நம்மைப் பார்த்து இவனுக்கு இதில் இருந்து மீண்டுவர வழி தெரியவில்லை என்றும், கூறு கெட்டவன் என்றும், தேவையில்லாமல் வேலைகளைச் செய்கிறான் என்றும் இன்னும் பல விதத்திலும் இகழ, நம்மைச் சாய்க்க வழி வகுக்கும் என்கிறார்.


நம்மாளு: ஐயா, சுருக்கமாக...


தவிர்க்க வேண்டியனவற்றைத் தவிர். எண்ணித் துணி. துணிந்தபின் உன்னையே நொந்து கொள்ளாதே. மீண்டும் எழ எண்ணு. அவ்வளவே.


மீண்டும் ஒரு முறை அந்தக் குறளை ஒரு எட்டு எட்டிப் பார்த்துவிடுங்கள்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Post: Blog2_Post
bottom of page