top of page
Search

பகல்வெல்லும் கால்ஆழ் ... 481, 500

04/04/2021 (77)

காலமும் களமும் சரியா இல்லை என்றால் எளியதும் வலியதை வெல்லும்.

இதற்காக முதலில் ‘வலியறிதல்’ (48), அதைத் தொடர்ந்து ‘காலம் அறிதல்’ (49), ‘இடனறிதல்’ (50) ஆகிய அதிகாரங்களை ஒதுக்கியிருக்கிறார் நமது வள்ளுவப்பெருந்தகை.


ரொம்பவே எளிய உதாரணத்தைக் காட்டுகிறார். வலிமை மிக்க ஆந்தைக்கு பகல் பொழுதில் பார்வை இருக்காது. அப்போது, காகம் அந்த ஆந்தையை வென்றுவிடும். அது போல, மாற்றாரை வெல்ல வேண்டுமென்றால் சரியான காலத்தை நோக்கியிருக்க வேண்டும். இதோ அந்த குறள்:


பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும்பொழுது.” ---குறள் 481; அதிகாரம் - காலமறிதல்

கூகையைக் காக்கை = ஆந்தையைக் காக்கை; பகல்வெல்லும் = பகலிலே வென்று விடும்; இகல் = மாற்றார்(ஐ); வெல்லும் வேந்தர்க்கு = வென்று விட நினைக்கும் தலைவனுக்கு; பொழுது வேண்டும் = சரியான காலம் வேண்டும்.


இந்த குறள் ‘எடுத்துக்காட்டு உவமையணி’ க்கு நல்லதொரு உதாரணம். அப்படின்னா? அதாங்க, எடுத்துக்காட்டு உவமையணி என்றால் நேர்ப்பொருளில் வெளிப்படையாகச் சொல்வது. உவமையும் உவமேயமும் தனித்தனித் தொடர்களாக வரும். ‘போல’ என்ற உவம உருபு வெளிப்பட வருவதில்லை. நாமே போட்டு படிச்சுக்கவேண்டியது தான். சும்மா, தெரிஞ்சு வைப்போம்.


உவமையை நல்லா யோசிச்சு பயன்படுத்தனும். இல்லை என்றால் சொல்ல வந்ததை விட்டுட்டுவாங்க. உவமையை பிடித்துக் கொண்டு உலுக்குவாங்க.

ராஜாவை காக்கான்னு சொல்லிட்டாங்க்கப்பா இந்த குறளிலேன்னு சொன்னா எப்படியிருக்கும்? ராஜா காக்கா ஆயிடுவாரா என்ன? நிற்க.


உவமைகளை மட்டுமே அடுக்கிட்டு சொல்ல வந்ததை கேட்போரிடமே விடுவதிலே கில்லாடி நம்ம வள்ளுவப்பெருந்தகை. சிக்கல் கிடையாது பாருங்க! இந்த அணிக்கு பெயர் இருக்கா? இருக்கு. இதை ‘பிறிது மொழிதல் அணி’ அல்லது ‘ஒட்டுஅணி’ என்று சொல்கிறார்கள். (ஆங்கில இலக்கணம் தெரியலையேன்னு கவலை படறோம்.) சரி, சரி நம்ம குறளுக்கு வந்துடுவோம்.


கால்ஆழ் களரில் நரிஅடும் கண்அஞ்சா வேல்ஆழ் முகத்த களிறு.” ---குறள் 500; அதிகாரம் - இடனறிதல்


வேல்ஆழ் முகத்த களிறு = வேல் கொண்டு எரிய வந்தா கண்ணைக் கூட சிமிட்டாதா யானை; களரில் = சேற்றில்; கால்ஆழ் = கால் சிக்கிட்டா; நரிஅடும் = நரி கூட யானையை வென்றுடும்!


சேறுன்னா கீழ்மைன்னும் சொல்லலாம். கீழான செயல்கள் செய்து மாட்டிக்கொண்டால் நரிகளும் நம்மை தாக்கும். கவனம்!


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.


உங்கள் அன்பு மதிவாணன்




Post: Blog2_Post
bottom of page