top of page
Search

பிணைஏர் மடநோக்கும் ... 1089

03/09/2022 (553)

அவளின் கண்கள் மிரட்டுகின்றன, புருவம் வளைந்து பயமுறுத்துகிறது, நெற்றி என்னை உடைந்து போக வைக்கிறது … இப்படி புலம்பிக் கொண்டு இருக்கிறான் அவன். அதுதான் ‘தகை அணங்கு உறுத்தல்’.


கொஞ்சம் மாற்றி யோசிக்கலாம் என்று யோசிக்கிறான்.


அவளுக்கு அழகான மான்களைப் போன்ற கண்கள். அதிலே ஒரு கள்ளம் கபடமற்ற பார்வை. அருகே சென்றால், பயந்து கொண்டு அழகாக துள்ளி ஓடும் மான்களைப் போன்று அவளும் நாணத்துடன் தள்ளிச் செல்லும் காட்சி.

இதுவெல்லாம் ரசிக்கத்தக்கனவாக இருக்கும்போது அதே கண்களில் காண்பவர்களின் உயிரைக் கொல்லும் பார்வையையும், அந்தக் கொடும் புருவத்தையும், என்னை உடந்து போக வைக்கும் நெற்றியையும், இன்னும் என்னை தளர்ந்து போக வைக்கும் இன்ன பிறவும், யார் அவளுக்கு தந்து என்னைக் கொல்வது?


Package or necessary evil என்பார்கள் ஆங்கிலத்தில். அதாவது, அவள்/அவன் ஒரு கலவை அல்லது தவிர்க்க இயலா கொடுமை என்று அவளுக்கும்/அவனுக்கும் தெரியும். ஆனால், இந்த மனசு இருக்கிறதே அது எல்லாமும், எல்லா காலங்களிலும், தனக்கு ஏற்றார் போல் இருக்க வேண்டும் என்று அடிச்சுக்கும். அப்படி இல்லை என்றால் வருந்தும்.


மனசு இருக்கே அது, அதை, அதை அப்படியே ஏற்றுக் கொள்ள மறுக்கும். இந்த மூக்கு மட்டும் கொஞ்சம் எடுப்பா இருந்தா எப்படி இருக்கும்? அவன் மட்டும் இன்னும் கொஞ்சம் அன்பாக இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும், அவள் மட்டும் கொஞ்சம் எல்லாரையும் அனுசரிச்சு போனால்? இப்படி நீளும் மனதின் எண்ணங்கள். எண்ணங்களாக இருக்கும் வரை அது சரி. ஆனால், நான் அவனை/அவளை மாற்றப் போகிறேன் என்று ஆரம்பிக்கும் போதுதான் பிரச்சனை ஆரம்பிக்கும்.


நாம் இந்த அவனை/அவளைப் போல புலம்பிட்டு விடுவது நல்லது. நம் பேராசான் காண்பிக்கும் ‘அவனை’ப் போல ரசித்துவிட்டு நடையைக் கட்ட வேண்டியது மிக முக்கியம். நாம குறளுக்கு வருவோம்.


‘பிணை’ என்றால் பெண் மான் என்று நமக்குத் தெரியும். ‘ஏர்’ என்றால் அழகு. “இரப்பும் ஏர் உடைத்து” என்று பார்த்திருக்கிறோம். காண்க 19/07/2022 (508), 06/02/2022 (346).


மட நோக்கு என்றால் கள்ளம் கபடமற்ற பார்வை. நாணம் என்றால் அழகான வெட்கம்.


பிணைஏர் மடநோக்கும் நாணும் உடையாட்கு

அணியெவனோ ஏதில தந்து.” --- குறள் 1089; அதிகாரம் – தகை அணங்கு உறுத்தல்


அழகான மானைப் போன்ற கள்ளம் கபடமற்ற பார்வையையும், நாணத்தையும் உடைய அவளுக்கு சம்பந்தமே இல்லாதையும் தந்தது யார்?


பிணைஏர் மடநோக்கும் நாணும் உடையாட்கு = அழகான மானைப் போன்ற கள்ளம் கபடமற்ற பார்வையையும், நாணத்தையும் உடைய அவளுக்கு;

ஏதில அணி தந்(த)து எவனோ? = சம்பந்தமே இல்லாதையும் தந்தது யார்?


நம்மாளு:


… பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி

சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றி போனேன் ஆஹா அவனே வள்ளலடி

மின்னலை பிடித்து தூரிகை சமைத்து ரவிவர்மன் எழுதிய வதனமடி

நூறடி பளிங்கை ஆறடி ஆக்கி சிற்பிகள் செதுக்கிய உருவமடி

இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில் நீதான் நீதான் அழகியடி

இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து என்னை வதைப்பது கொடுமையடி …


அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணை கிள்ளாதே …”


(ஜீன்ஸ் திரைப்படத்தில் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையில், ஹரிஹரனின் அருமையான குரலில், கவிஞர் வைரமுத்து அவர்களின் வரிகளில்)


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.


உங்கள் அன்பு மதிவாணன்




5 views0 comments

Comentários


Post: Blog2_Post
bottom of page