06/02/2022 (346)
இழிவில்லா இரவு குறித்து முதல் இரண்டு பாடல்கள் மூலம் விளக்கினார்.
கந்தர் அநுபூதியில், அருணகிரிநாதப் பெருமான் கல்வியை கரவாகிய கல்வி என்று குறிப்பிடுகிறார். கற்க, கற்க கரவு மனதுக்குள் புகுந்து கொள்ளுமாம். கரவு என்றால் ஒளித்து வைத்தல், மறைத்து வைத்தல் என்று பொருள்.
“கரவாகிய கல்வி உளார் கடை சென்று
இரவா வகை மெய்ப் பொருள் ஈகுவையோ? …” பாடல் 45, கந்தர் அநுபூதி
யாருக்கும் கொடுக்க வேண்டாம் என்று நினைப்பவர்கள் முன் நின்று என்னை இரக்க வைக்காமல் நீயே கொடுப்பாயா? என்று கேட்கிறார்.
அறிவோ, செல்வமோ பெருக, பெருக ஒரு வித மனமாற்றத்தை ஏற்படுத்தும் போல. அதனால்தான், மகாகவி பாரதியும், படிச்சவன் சூதும் வாதும் பண்ணிணால் 'ஐயோ' என்று போவான் என்று சாபம் கொடுத்தார்.
“தரித்திரம் போகுது; செல்வம் வளருது
படிப்பு வளருது; பாவம் தொலையுது;
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
போவான், போவான், ஐயோவென்று போவான்! --- புதிய கோணாங்கி, மகாகவி பாரதி
நமக்கு கிடைக்க, கிடைக்க ஒளித்து வைக்க வேண்டும் என்ற கரவு தோன்றிவிடுகிறது. நாம் கையை மேலே மேலே நோக்கியே இரைஞ்சுகிறோம். நமக்கும் கீழே, நம்மை நோக்கி இரைஞ்சும் கைகளை நாம் கண்டு கொள்வதில்லை. இது நிற்க.
“கரப்பிலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று
இரப்பும் ஓர் ஏஎர் உடைத்து.” --- குறள் 1053; அதிகாரம் – இரவு
கரப்பு = ஒளித்தல்; கடன் = கடமை; ஏர் = அழகு; ஏஎர் – அளபெடை; கரப்பிலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று = தன் கடமையை அறிந்த கரப்பு இல்லா நெஞ்சங்களின் முன் நின்று; இரப்பும் ஓர் ஏஎர் உடைத்து = இரப்பதுகூட அழகுதான்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
コメント