09/06/2024 (1191)
அன்பிற்கினியவர்களுக்கு:
பொருட்பாலின் இறுதி அதிகாரம் கயமை. மக்களில் இழி செயல்களில் ஈடுபடுவர்களைக் குறித்த தனது குறிப்புகளைக் கொடுக்கிறார்.
நம் பேராசான் தம்மை முன்னிறுத்தி “யாம்” என்று பயன்படுத்திய குறள்கள் மூன்று.
புதல்வரைப் பெறுதல் அதிகாரத்தில் மக்கட் பேறு பெரும் பேறு என்றார். காண்க 06/03/2021. மீள்பார்வைக்காக:
பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற. - 61; - மக்கட் பேறு (புதல்வரைப் பெறுதல்)
வாய்மையைப் போன்ற நல்ல செயல் இல்லை என்றார் குறள் 300 இல். காண்க 25/01/2021. மீள்பார்வைக்காக:
யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற. - 300; - வாய்மை
அடுத்து, கயமையில் முதல் குறள்:
கயவர்கள் எப்படி இருப்பார்கள் என்றால் சிறந்த குணங்கள் கொண்ட மக்களைப் போலவே இருப்பார்கள். அது போன்ற உருவ ஒற்றுமை வேறு எங்கும் நான் பார்த்ததில்லை என்று தம்மை முன்னிலைப்படுத்திச் சொல்கிறார்.
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில். – 1071; - கயமை
கயவர் மக்களே போல்வர் = இழி குணம் கொண்டவர்களும் பார்வைக்கு நற்குணம் கொண்ட மக்களைப் போலவே இருப்பார்கள்; அவர் அன்ன
ஒப்பாரி யாம் கண்ட தில் = அவர்களைப் போல உருவ ஒற்றுமையை நான் வேறு எங்கும் கண்டதில்லை.
இழி குணம் கொண்டவர்களும் பார்வைக்கு நற்குணம் கொண்ட மக்களைப் போலவே இருப்பார்கள். அவர்களைப் போல உருவ ஒற்றுமையை நான் வேறு எங்கும் கண்டதில்லை.
சரி, அவர்களை இனம் காண்பது எப்படி? அவர்களின் செயல்களைக் கவனியுங்கள் அவ்வளவே!
நினைப்பதற்கு நேரமில்லை
நினைத்துவிட்டால் மறப்பதில்லை …
… காரியத்தில் துணிந்தவர்கள்
வேறெதையும் நினைப்பதில்லை
எடுத்தவர்க்கு ஒரு நினைவு
கொடுத்தவர்க்குப் பல நினைவு
அடுத்தவரைக் கெடுப்பவர்க்கு
அது ஒன்றே பெரும் நினைவு
பழி வாங்கும் நினைவு வந்தால்
பசி கூட எடுப்பதில்லை
பாசத்திலே நிறைந்த மனம்
பழி வாங்க நினைப்பதில்லை …
நினைப்பதற்கு நேரமில்லை
நினைத்துவிட்டால் மறப்பதில்லை … கவியரசு கண்ணதாசன், நினைப்பதற்கு நேரமில்லை, 1963.
கயவர்கள் கொடுத்துவைத்தவர்கள். அவர்களுக்கு ஒரே நினைவு. எடுப்பவர்க்கு ஒரு நினைவு; கொடுத்தவர்க்குப் பல நினைவு! நல்லவர்க்கு எப்போதும் நெஞ்சத்தில் குழப்பம் குடி கொண்டிருக்கும். நாம் செய்வது சரியா, தவறா என்ற அலசல் நடந்து கொண்டே இருக்கும். ஆனால், கயவர்களுக்கு அதுபோன்ற மனக் குழப்பங்கள் இல்லை. அவர்களுக்குத் தேவை - அவ்வளவே!
நன்றறி வாரிற் கயவர் திருவுடையார்
நெஞ்சத் தவலம் இலர். – 1072; - கயமை
நன்று அறிவாரின் = நன்மை, தீமை ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு விதித்தன செய்து விலக்கியன ஒழித்துச் செயல்படும் நல்லவர்களைப் பார்க்கும் பொழுது; கயவர் திருவுடையார் = கயவர்கள் கொடுத்து வைத்தவர்கள்; நெஞ்சத்து அவலம் இலர் = அவர்களுக்கு அடுத்தவரைக் கெடுத்து வாழ வேண்டும் என்ற ஒரே நினைவைத் தவிர வேறு ஏதும் குழப்பம் இல்லை.
நன்மை, தீமை ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு விதித்தன செய்து விலக்கியன ஒழித்துச் செயல்படும் நல்லவர்களைப் பார்க்கும் பொழுது, கயவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அவர்களுக்கு அடுத்தவரைக் கெடுத்து வாழ வேண்டும் என்ற ஒரே நினைவைத் தவிர வேறு ஏதும் குழப்பம் இல்லை.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.
Kommentare