top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

விருப்புஅறா அளவளாவு ...522, 523

28/04/2021 (101)

சுற்றத்தைப் பேணுவோம்

நன்றி, நன்றி, நன்றி

வாழ்த்திய அனைத்து சுற்றங்களுக்கும் நன்றிகள் பல.


நாடாண்டலும் சரி, தனியொருவனா இருந்தாலும் சரி வெற்றி பொருந்திய வாழ்க்கை வேண்டுமா சுற்றத்தை துணைக்கு வைத்துக்கொள். சுற்றம் சூழ வாழ்தல் ஒரு கலை. அதுக்கு தேவையானது நான்கு. அவையாவன: 1. எப்போதும் அன்பு காட்டுவது; 2. நினைவில் வைத்துப் பாராட்டுவது; 3. ஒத்துப்போதல்; 4. குற்றம் பாராட்டாம இருப்பது. சொன்னது யார் தெரியுங்களா? தவத்திரு குன்றக்குடி அடிகளார். நமக்கு தான் தெரியுமே – ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’.


நம்ம வள்ளுவப்பெருந்தகை இதுக்கு ஒரு அதிகாரம் அமைத்து ‘சுற்றந்தழால்’ ன்னு தலைப்பு கொடுத்திருக்கார்(53 வது அதிகாரம்). சுற்றந்தழால் என்றால் சுற்றத்தைத் தழுவுதல்/பேணல்.


அன்பு அகலாச் சுற்றம் அமைந்து விட்டால் அதுவே ஆக்கம் பலவும் தந்து வாழ்க்கையை செழிப்பாக்குமாம்.


விருப்புஅறாச் சுற்றம் இயையின் அருப்பறா ஆக்கம் பலவும் தரும்.” --- குறள் 522; அதிகாரம் - சுற்றந்தழால்

விருப்புஅறாச் சுற்றம் = அன்பு அகலாச் சுற்றம்; இயையின் = அமைந்துவிட்டால்; அருப்பு அறா = அரும்புதல் அகலா, கிளைத்தல் அகலா, (என்றென்றும் பரந்து விரியும்); ஆக்கம் பலவும் தரும் = செல்வம் பலவும் தரும்

அப்படி ஒரு சுற்றம் ஒருத்தனுக்கு அமையலைன்னா கரையே இல்லாத குளத்தில் நீர் நிரப்ப முயல்வது போல் ஆயிடுமாம் வாழ்க்கை! (கரையே இல்லன்னா அதை குளம்ன்னு சொல்ல முடியும்? – மைண்ட் வாய்ஸ்)

அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று.” --- குறள் 523; அதிகாரம் - சுற்றந்தழால்

அளவளாவு = அன்பொடு நெஞ்சம் கலந்து உறவாடும் தன்மை; இல்லாதான் வாழ்க்கை = இல்லாதாவனின் வாழ்க்கை; குள(ம்) = குளத்தின்; வளா = பரப்பு; கோடு = கரை, குளவளாக்கோடின்றி = தடுப்புக் கரையில்லா குளத்தில்; நீர்நிறைந் தற்று = நீரை நிரப்புவது போல


சுற்றத்தைப் பேணுவோம்.


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.


உங்கள் அன்பு மதிவாணன்






Comments


bottom of page