03/04/2025 தலைப்பூ 1
- Mathivanan Dakshinamoorthi
- Apr 3
- 2 min read
Updated: 19 hours ago
அன்பிற்கினியவர்களுக்கு:
மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இந்த இடைவெளி எனக்கும் ஒரு சோர்வையே உண்டாக்கிவிட்டது.
என்ன எழுதலாம் என்று சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில் நேயர் விருப்பங்கள் பல குவிந்தன!
எல்லாவற்றையும் கலந்து கதம்பமாகக் கட்டி ஒரு குறுந்தொடர் எழுதினால் என்னவென்று தோன்றியது, அதன் விளைவுதான்
“தலைப்புகள் இல்லாத் தலைப்பூக்கள்!”
தலைப்பூக்களில் திருமந்திரம் வரலாம், திருக்குறள் வரலாம், திரைப்படங்களும் வரலாம், பாடல்கள் பல வரலாம். மொழிகளின் சிறப்புகளைப் பேசலாம், அகநானூறு, புறநானூறு உள்ளிட்டவைகளும் தலைக் காட்டலாம், சமகால நிகழ்வுகள் வரலாம், வடலூர் வள்ளல் பெருமானாரின் சன்மார்க்கம் என்றால் என்ன என்றும் பேசலாம், பணக்காரர் ஆவது எப்படி என்றும் வரலாம், படிப்பது எப்படி என்றும் பேசலாம்! இவ்வாறு நேயர்களின் விருப்பங்கள் ஏராளம், ஏராளம்! பேசுவோம் இயன்றவரை!
தலைப்பூ – 1: ரோட்டரியின் வினாக்கள்
சமூக சேவையை நோக்கமாகக் கொண்டு இயங்கும் ஒரு பன்னாட்டு அமைப்புதான் ரோட்டரி சங்கம் (ROTARY club) என்பது நம் அனைவர்க்கும் தெரிந்ததே.
ரோட்டரி (Rotary) என்றால் ஒரு மையப் புள்ளியை வைத்துக் கொண்டு அதனைச் சுற்றிச் சுற்றி இயங்குவது என்று பொருள்.
இந்தச் சங்கம் தனது செயல்களை நெறிப்படுத்த எப்பொழுதும் நான்கு கேள்விகளை மையமாக வைத்துக் கொண்டு செயல்படும். அவையாவன:
1. Is it the truth?
2. Is it fair to all concerned?
3. Will it build good will and better friendships?
4. Will it be beneficial to all concerned?
1. இது உண்மையா?
2. சம்பந்தப்பட்ட அனைவர்க்கும் இது நியாயமாக இருக்குமா?
3. இது நல்லெண்ணத்தையும் சிறந்த நட்பையும் வளர்க்குமா?
4. இது சம்பந்தப்பட்ட அனைவர்க்கும் பயனளிக்குமா?
இந்தக் கேள்விகளின் தோற்றம் மிகவும் ஆச்சரியமானது. திவாலாகிக் கொண்டிருந்த ஒரு அலுமினியத் தொழிற்சாலையில் உருவானவைதாம் இந்த வினாக்கள்!
1932 இல் ஹெர்பர்ட் ஜே டெய்லர் (Herbert J Taylor) என்பார் தம் நிறுவனத்தைத் தூக்கி நிறுத்த என்ன செய்ய வேண்டும் என்பதனைச் சிந்தித்த பொழுது உதித்தவைதாம் அவை. இந்த வினாக்களின் பயனைக் கண்கூடாகக் கண்ட அவர், தாம் ரோட்டரி சங்கத்தில் 1940 இல் பொறுப்புக்கு வந்த பொழுது இந்த வினாக்களை அங்கு அறிமுகப்படுத்தினார். இப்பொழுது உலகமெங்கும் இந்த வினாக்கள் ரோட்டரி சங்கங்களின் செய்லபாடுகளை நெறிப்படுத்துகின்றன.
இவ்வினாக்கள் எல்லார்க்கும் எல்லாச் செயல்களுக்குமே எல்லா காலத்திற்குமே பொருந்திவருவன!
இந்த வினாக்களுக்கு அடிப்படை எது என்று கேட்டால் அன்பு, அன்பு, அன்பு, அன்பு!
அன்பு இருந்தால் அனைத்தும் சாத்தியமே.
அன்பினில் உண்மை;
(Is it true?)
அன்பினில் நேர்மை;
(Is it fair)
அன்பினில் தொடர்ச்சி;
(Will it enable long standing relationship?)
அன்பினில் மகிழ்ச்சி!
(Will it lead to satisfaction and pleasure?)
சரி, இதனைச் சொல்வதற்கா இன்றைய பதிவு என்கிறீர்களா? நான் சொல்ல வந்ததே வேறு.
உண்மையான நன்பனைக் கண்டுபிடிக்க வினாக்கள் இருக்கின்றனவா??
உண்மையானத் துணையைக் கண்டுபிடிக்க உதவும் நான்கு வினாக்கள் எவை? என்பனவற்றைக் குறித்துப் பேசலாம் என்று ஆரம்பித்த வேளையில் ஹெர்பர்ட் டெய்லர் இடைமறித்துவிட்டார்!
நாளைத் தொடர்வோம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.

Comments