top of page
Beautiful Nature

04/04/2025 தலைப்பூ 2:

துணையைக் கண்டுபிடிப்பது எப்படி?


அன்பிற்கினியவர்களுக்கு:

தொலைக்காட்சியில் ஒரு திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது, நான் அவ்வளவாகத் திரைப்படங்கள் பார்ப்பதில்லையென்றாலும் அந்தக் காட்சி அமைப்புகள் கவர, திரைப்படத்தின் பெயர் என்னவென்றே தெரியாமல் அமர்ந்து பார்க்கத் தொடங்கினேன்.

சுருக்கமாகக் கதை இதுதான்:

ஒரு இளம் பெண்ணின் அம்மா இறந்துவிடுகிறார், அவர் ஒரு உயில் (will – விருப்புறுதி ஆவணம்) எழுதி வைத்துள்ளார். மற்ற பிள்ளைகளுக்குச் சொத்துகளைப் பகிர்ந்தளித்திருந்த அவர், தன் பெண்ணுக்கென்று ஒரு கடிதத்தை மட்டுமே எழுதி வைத்திருந்தார். அக்கடிதத்துடன், அந்தப் பெண் 13 வயது இருக்கும் பொழுது என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று அவளே கைப்பட எழுதிய ஒரு பட்டியலையும் (நிரல் - list) இணைத்து நீ விரும்பிய இந்தச் செயல்களையெல்லாம் முடித்தால் உனக்கு உரித்தானது கிடைக்கும் என்று அந்தக் கடிதத்தை முடித்திருந்தார்.

அந்தப் பட்டியலில் இருந்தவை பல! அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம்.

1.   பியானோவில் ஒரு குறிப்பிட்ட பாட்டினை மக்கள் முன்னிலையில் வாசிப்பது;

2.   தன்னுடைய தந்தையைச் சந்தித்துப் பேசுவது. (இவள் தன் குடும்பத்தைப் பிரிந்து வந்து விட்டவள்);

3.   ஒரு மிகப்பெரிய கூடைப் பந்து வீரருடன் விளையாடுவது;

4.   பள்ளியில் ஆசிரியாராக வேலை செய்வது;

இப்படிப் பல.

இறுதியாகத் தனக்குச் சரியான, உண்மையானத் துணையைத் தேர்ந்தெடுப்பது!

ஆனால், அவளோ அந்தத் தருணத்தில் ஒரு அலுவலகத்தில் உயரிய பொறுப்பில் இருந்தாள். ஒரு காதலுடன் தனியாக வசித்துக் கொண்டும் இருந்தாள் (Live-in). வாழ்க்கை அவளுக்கு ஒருவாறு அமைந்துவிட்டது. அவளுக்கு அதனில் குறை இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தாலும் பயணத்தைத் தொடர்வதுதானே நடைமுறை (Practical) என்ற நினைப்பினில் அவள் ஓடிக்கொண்டிருக்கிறாள்.

அம்மா மற்றவர்களுக்குப் பகிர்ந்து அளித்தது போலத் தனக்கும் அளித்துவிட்டுப் போக வேண்டியதுதானே. அது என்ன, எனக்கு மட்டும் ஏன் “நிபந்தனைகளுக்கு உட்பட்டது” (Conditions apply)? என்ற கேள்விகள் அலை அலையாக அவளின் மனத்தினுள்.

மேலும் அவளுக்கு, “இது என்ன சின்னப் பிள்ளைத்தனமா இருக்கே” என்றும் ஒரு கேள்வி! கிடைக்கப் போகும் பணத்திற்காக இதை எல்லாம் செய்ய வேண்டுமா என்றும் ஒரு வினா!

நண்பர்களும் மற்றவர்களும் அவளுக்கு ஊக்கத்தை அளிக்க ஒவ்வொன்றாக முடிக்கிறாள். அவளுக்குப் பரிசாக அம்மா வாழ்ந்த வீட்டைப் பெறுகிறாள்.

இவ்வளவுதான் கதை!

அந்தத் திரைப்படத்தின் பெயர் – The Life List. நெட்பிளிக்ஸில் (Netflix) 28/03/2025 ஆம் தேதி வெளியான படம் இது! அந்தப் படத்தை நேரமிருந்தால் பாருங்க!

சரி, இந்தப் படத்தைக் குறித்துப் பேச என்ன அவசியம் என்கிறீர்களா?  நேற்று நண்பனையும், வாழ்க்கைத் துணையையும் கண்டுபிடிக்க வினாக்கள் இருக்கின்றனவா? என்று முடித்திருந்தோம்.

இந்த வினாக்களை தி லைப் லிஸ்ட் (The Life List) கதையாசிரியர் லோரி நெல்சன் ஸ்பீல்மேன் (Lori Nelson Spielman) அழகாக அடுக்கியிருந்தார். அவரின் வினாக்கள் துணையைக் கண்டுபிடிப்பது எப்படி என்று இருந்தாலும் அவற்றுள் மூன்று நண்பர்களுக்கும் பொருந்தும்.
 

சரி, நேரத்தைக் கடத்தாமல் அந்தக் கேள்விகளுக்கு வருவோம்.

வாழ்க்கைத் துணையைக் கண்டுபிடிக்க நான்கு வினாக்கள்:

1.   நமக்கே உரித்தான இரகசியங்களை ஒளிவு மறைவில்லாமல் அவரிடம் பகிர்ந்து கொள்ள இயலுமா?

2.   அவரிடம் அன்பு என்னும் பண்பு இருக்கின்றதா?

3.   அவர் உனது வளர்ச்சிக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருப்பாரா?

4.   அவர் உன் குழந்தைகளுக்கு ஒரு பெற்றோராக இருக்கத் தகுதியானவரா?

1.     Can you tell him/her everything in your heart?

2.     Is he/she kind?

3.     Does he/she help you become the best version of yourself?

4.     Can you imagine having a family together?

அருமையான நான்கு கேள்விகள், ஹெர்பர்ட் டெய்லர் ரோட்டரியில் அறிமுகப் படுத்திய நான்கு வினாக்களைப் போல!

துணையோடு இருப்பவர்கள், நினைக்கலாம்! என்ன இப்போது சொல்கிறாயே, முன்பே சொல்லியிருந்தால் என்று பெருமூச்சுகூட விடலாம்…

கொஞ்சம் நிறுத்துங்கள்.

காலத்தை எப்பொழுதும் பின்னோக்கி நகர்த்திட இயலாது. ஆனால் முன்னோக்கி நகர்த்திட இயலும்.

நாம் செய்ய வேண்டியது, மாற்றி யோசிப்பதுதான். அஃதாவது:

1.   நான் என் துணைக்கு நம்பிக்கையானத் துணையாக இருக்கின்றேனா?

2.   உண்மையான அன்பை என் துணையிடம் எப்பொழுதும் வெளிப்படுத்துகிறேனா?

3.   என் துணையின் வளர்ச்சிக்கு முழு மனத்துடன் ஒத்துழைக்கிறேனா?

4.   என் குழந்தைகளுக்கு நல்லதொரு பெற்றோர் என்று சொல்லக் கூடிய வகையினில் என்னுடைய எண்ணமும், சொல்லும், செயலும் அமைந்திருக்கின்றனவா?

யோசித்துப் பார்த்தால் நமக்கே புரியும் நாம் எங்கு நின்று கொண்டிருக்கிறோம் என்று!

இது நிற்க.

நான்கு கேள்விகள் வாழ்க்கைத் துணையைக் கண்டுபிடிக்க உதவும் என்றால் முதல் மூன்று கேள்விகள் நண்பர்களை அடையாளப்படுத்த உதவும்.

என்ன சரிதானே?

நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


ree

Comments


©2021 by தினமும் திருக்குறள்.

bottom of page