top of page
Beautiful Nature

05/04/2025 தலைப்பூ 3:

தமிழினில் ஞானச் சொல்கள்


சிக்கி முக்கிக் கல்களை உரசும் பொழுது நெருப்பு வெளிப்படுகின்றது; தீக்குச்சியினைத் தீப்பெட்டியின் உரசும் பக்கத்தினில் உரசினால் நெருப்புத் தோன்றுகிறது; மூங்கில்கள் ஒன்றுடன் ஒன்று உரசும் பொழுதும் தீ உருவாகின்றது!


இதெல்லாம் எனக்குத் தெரியாதா? என்கிறீர்களா?


உண்மைதான், இவை எல்லாம் நாம் கண்டறிந்த அறிவு. இது உண்மையா என்றால் அது ஒரு தனி வினா!


சரி, அந்த நெருப்பு, அந்தத் தீ எங்கிருந்து வந்தது? இதுதான் கேள்வி.

இதற்குப் பதில் என்னவென்றால் அந்த நெருப்பு, அந்தத் தீ மறையும் பொழுது எங்கு சென்று ஒளிந்து கொள்கின்றதோ அங்கிருந்துதான் தோன்றியது! இதுதான் உண்மையான உண்மை.


நாம் எங்கிருந்து தோன்றினோம் என்றால் நாம் எவ்விடத்தில் மறைந்து போகின்றோமோ அந்த இடத்தில் இருந்துதான் தோன்றியிருக்க இயலும்!

ஆகையினால்தான் தமிழிலே ஒரு அழகான சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். அதுதான் “பெற்றோர்”.


பெற்றோர்கள் குழந்தைகளை உருவாக்குவதில்லை! அவர்கள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள். ஆகையினால் அவர்கள் பெற்றோர் ஆகின்றனர். எங்கு எல்லாம் ஒடுங்கியிருக்கின்றதோ அங்கிருந்து பெற்றுக் கொள்கிறார்கள்!


தமிழிலே காணக் கிடைக்கும் ஞானச் சொல்களில் பெற்றோரும் ஒன்று.

ஆங்கிலத்தில் பெற்றோர் என்பதற்கு Parent என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். அதிலேயும் ஒரு சிறப்பு இருக்கதான் செய்கின்றது.


Parent என்ற சொல்லுக்கு மூலம் இலத்தினில் இருக்கும் Parens.

Rens என்றால் வாடகை என்று இலத்தீனில் பொருள். அந்த Rens என்னும் இலத்தீனியச் சொல் Rent என்று ஆங்கிலத்தில் மாறி ஒலிக்கின்றது. Pa என்பது பெற்றோரைக் குறிக்கின்றது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் Parent என்றால் “வாடகைக்கு அமர்த்தப்பட்டவர்கள்” என்று பொருள்.


“எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” - (தொல்.சொல். 157) என்று தொல்காப்பியம் சொன்னால் அது தமிழுக்கு மட்டுமே என்று நினைத்தல் தவறு! அனைத்து மொழிக்கும் அது பொருந்தும்.


இந்தச் சூத்திரத்திற்கு விரிவுரை எழுதிய பெருமக்கள் “எல்லாச் சொல்லும்” என்பதற்குப் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்னும் நால்வகைச் சொற்களையுமாம் என்கிறார்கள். இந்த உரையை இன்னும் விரித்திடல் வேண்டும்.


எல்லா மொழிகளிலும் சொல்கள் தோன்றுவதே அவற்றின் பயனைக் கொண்டுதான். அந்தப் பயன்கள் மறைய சொல்லும் மறைந்து போகின்றது.

அப்படியென்றால் பெற்றோர் என்பது மட்டும் எப்படி ஞானச் சொல்லாகும் என்ற கேள்வி எழலாம். இதற்கு நம் வள்ளுவப் பேராசான்தாம் துணை.


சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை

வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. – குறள் 645

 

 

பிறிதொரு சொல்லை இட்டு நிரப்ப முடியாச் சொல்கள் அனைத்தும் ஞானச் சொல்களே. இவ்வாறு பல சொல்கள் தமிழில் உள. சமயம் வாய்க்கும் பொழுது பேசுவோம்.


உங்களுக்கு மேலும் ஒரு வினா எழலாம்!


என்ன சொற்கள் என்றுதானே வழக்கத்தில் உள்ளது. ஏன் சொல்கள், சொல்கள் என்று திரும்பத் திரும்பத் திரித்துச் சொல்கிறாய் என்று தோன்றலாம்.


இதற்குக் கள்ளைக் குறித்து ஆராய்ந்தால் தெளிவு பிறக்கும்.


நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


 

ree

Comments


©2021 by தினமும் திருக்குறள்.

bottom of page