top of page
Search

671,672,673,674,675,676...

16/05/2023 (803)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

வினை செயல்வகை அதிகாரத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் பகையை எப்படி வெற்றி கொள்வது, அது முடியாவிட்டால் எப்படி அதனை நமக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் இருப்பது என்பதை விவரிக்கிறார். பகை என்றால் பகையைப் போன்றவைகளும் அடங்கும்.

குறள் 671 இல் ஆராய்ந்து முடிவு எடுத்துவிட்டால் அதற்கும் மேல் தள்ளிப்போடுவது கூடாது என்றார். காண்க 07/05/2023 (794).


சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல் அத்துணிவு

தாழ்ச்சியுள் தங்குதல் தீது.” --- குறள் 671; அதிகாரம் – வினை செயல்வகை


குறள் 672 இல் உடனடியாகச் செய்ய வேண்டியதை உடனடியாகவும், தள்ளிப்போட்டுச் செய்ய வேண்டியதை த் தள்ளிப்போட்டும் செய்ய வேண்டும் என்றார். காண்க 08/05/2023 (795).


தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க

தூங்காது செய்யும் வினை.” --- குறள் 672; அதிகாரம் – வினை செயல்வகை


முதல் இரண்டு பாடல்கள் மூலம் வினை செயல்வகையைப் பொதுப்பட கூறினார்.


பகையுடன் ஒப்பிடும்போது, நமது நிலை மூன்று நிலைகளில் இருக்கலாம். வலியான், ஒப்பான், மெலியான் என பரிமேலழகப் பெருமான் பகுக்கிறார்.

அதாவது: 1) பகையைவிட நாம் வலிமையோடு இருப்பது (வலியான்); 2) பகையும் நாமும் சரி நிகர் சம மான அளவில் வலிமையோடு இருப்பது (ஒப்பான்); 3) பகையின் வலிமையைவிட நமது வலிமை சற்று தாழ்ந்து இருப்பது (மெலியான்).


ஒரு வினையை முடிக்கும் வழிமுறைகள் நான்கு. இவைகள் நமக்குத் தெரிந்தனவே. அவையாவன: கொடுத்தல், இன் சொல் சொல்லல், வேறு படுத்தல், மற்றும் ஒறுத்தல். அதாவது, தான, சாம, பேத, தண்டம்.


எனவே, மூன்றாவது பாடலான, குறள் 673 இன் மூலம் வலிமையின் சிறப்பையும், அவ்வாறு இல்லாமல் மற்ற இரு நிலைகளில், அதாவது, ஒப்பானாகவோ மெலியானாகவோ இருப்பின் அதற்கேற்றார்போல் செயல்படுங்கள் என்பதை எடுத்துச் சொல்கிறார். காண்க 09/05/2023 (796).


ஓல்லும்வாய் எல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்

செல்லும்வாய் நோக்கிச் செயல்.” --- குறள் 673; அதிகாரம் – வினை செயல்வகை

பகையை அழிக்க இயலும் இடத்தில் எல்லாம் போர்தான் சரியான வழி. இயலா இடங்களில், ஏனைய மூன்று வழிமுறைகளில் எது செல்லுமோ அதைக் கொண்டு அப்பகையைத் தவிர்க்க என்றார்.


நாம் வலியானாக இருந்தால் பகையை அழிக்கப் பயன்படுத்த வேண்டிய வழி முறை தண்டம்.


அவ்வாறில்லாமல், நாம் ஒப்பானாகவோ அல்லது மெலியானாகவோ இருந்தால் ஏனைய மூன்று வழிமுறைகளில் எதனால், நமக்கு, நன்மை நிகழுமோ அதைத் தேர்ந்தெடுத்து செய்ய வேண்டும் என்றார்.

இந்தக் குறளைத் தொடர்ந்து வரும் நான்காவது பாடலில் வலியான் செய்யுந்திறம் சொன்னார். காண்க 10/05/2023.


வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்

தீயெச்சம் போலத் தெறும்.” --- குறள் 674; அதிகாரம் – வினை செயல்வகை

பகையை முடிக்க வேண்டும் என்றால் முற்றாக அழித்துவிடுங்கள். தீயை அணைக்கும்போது மிச்சம் வைத்தால் என்ன ஆகும் என்பதை உவமையாக்கி தெளிபடுத்தினார்.


குறள்கள் 675, 676, 677 இல் பகையும் நாமும் ஒத்த அளவில் வலிமையோடு இருந்தால் செய்ய வேண்டியது என்ன என்பதை மிகவும் அழகாக சொல்லிச் சென்றார்.


குறள் 675 இல் ஐந்து காரணிகளைச் சொல்லி, பத்து காரணிகளை உள்ளடக்கினார். காண்க 11/05/2023 (798).


பொருள்கருவி காலம் வினைஇடனொ டைந்தும்

இருள்தீர எண்ணிச் செயல்.” --- குறள் 675; அதிகாரம் – வினை செயல்வகை


பொருள் என்றால் அழிக்கும் பொருள், பெரும் பொருள்; கருவி என்றால் தனக்கு உள்ள படை, மாற்றானுக்கு உள்ள படை; காலம் என்றால் தனக்கான காலம், மாற்றானுக்கான காலம்; வினை என்றால் தான் செய்யும் வினை, மாற்றான் செய்யும் வினை; இடம் என்றால் தனக்குண்டான இடம், மாற்றானுக்கு ஏற்ற இடம் என்று இவை அனைத்தையும், இருள்தீர எண்ணிச் செய்யச் செய்யவெண்டுமென்றார்.


எப்போதும், ஒத்த பலத்தோடு இருப்பவர்கள்தாம், மிக ஆழமாகச் சிந்திக்க வேண்டும் என்னும் குறிப்பினைக் காட்டினார். வலியானுக்கோ, மெலியானுக்கோ இந்தத் தொல்லை இல்லை.


நடுத்தர வர்க்கத்தினர்தான் (Middle class) கத்தியின் மேல் நடப்பதுபோல் நடக்க வேண்டும்!


குறள் 676 இல்

முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்

படுபயனும் பார்த்துச் செயல்.” --- குறள் 676; அதிகாரம் – வினை செயல்வகை


பெறப்போகும் பயனையும் செலவிடப் போகும் வளங்களையும் (resources) சீர்தூக்கிப் பார்த்துச் செய்யுங்கள் என்றார். வளங்களில் தட்டுப்பாடு இருக்கும்போது (Resource crunch) இது மிக மிக முக்கியம் என்பது குறிப்பு.


இந்த அதிகாரத்தை தொகுத்துப் பார்ப்பது நமக்கு பெரும் பயன் அளிக்கும் என்பதால், என் ஆசிரியர் மீண்டும் ஒரு முறை தொகுத்துச் சொன்னார்.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்! (இது திருமூலப் பெருமான் திருமந்திரத்தில் அருளிய வாசகம்)


நாளைத் தொடர்வோம்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.






Post: Blog2_Post
bottom of page