09/06/2022 (468)
வரைவின் மகளிரோடு தொடர்பு வைத்து இருத்தல் ஒருவனுக்குத் துன்பம் தரும் என்பதுதான் இந்த அதிகாரத்தின் அடி நாதம். அதை வெவ்வேறு வகையில் நமக்கு இடித்து உரைக்கிறார்.
ஒரு தடவை சொன்னா நம்மாளுங்க கேட்ப்பாங்களா? அதான், இந்த அதிகாரத்தில் பத்து குறளிலும் மேலும் எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் அடித்து துவைக்கிறார். அந்த கால கட்டத்தில் இந்தத் தலைப்பை எடுத்து விவாதிக்கும் முதல் நூலாக நம் திருக்குறள் இருந்துள்ளது என்பது அறிஞர்களின் கருத்து.
அழகிய வளையல்களை அணிந்து குலுக்கி நடை போட்டு, அன்பு என்பதை எதிர்பார்க்காது, கொண்டு வந்திருக்கும் பணத்தின் மேல் மட்டுமே குறியாக இருக்கும், வரைவில் மகளிரின் தேனூறும் வாய்ச்சொல் பேச்சு, அதாவது சகவாசம் துன்பம் தருமாம். நம் பேராசான் சொல்கிறார்.
(அவர்கள் ஏன் அன்பை எதிர்பார்க்கனும்? – இது எதற்காகச் சொல்கிறார் என்றால் வீட்டில் அன்புடன் ஒருத்தி இருக்கும் போது, நீ ஏன் ராஜா ஊர் மேல போய்க் கொண்டிருக்கிறாய் என்பதைச் சொல்ல!)
“அன்பின் விழையார் பொருள் விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்.” --- குறள் 911; அதிகாரம் – வரைவின் மகளிர்
தொடி = வளையல்; ஆய் தொடி = அழகிய வளையல்; ஆய் தொடியார் = அழகிய வளையல்களை அணிந்திருக்கும் வரைவில் மகளிர்.
ஆய் என்பது உரிச்சொல். உரியச் சொல் = உரிச்சொல். ஆங்கிலத்தில் adjective, adverb என்கிறார்களே அதைப் போல.
அன்பின் விழையார் பொருள் விழையும் ஆய்தொடியார் = அன்பை எதிர்பார்க்க மாட்டார்கள், ஆனால் கொண்டு வந்திருக்கும் பொருளின் மேல் மட்டும் குறியாக இருக்கும் மகளிர்; இன்சொல் இழுக்குத் தரும் = அவர்களின் மயக்கு மொழிகள் இழுக்குத் தரும்.
அதுவும் எப்படிப் பட்ட இன்சொல்லாம்? தொடர்கிறார் அடுத்தக் குறளில். நாமும் தொடர்வோம் நாளை.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com )
Commenti