16/06/2022 (475)
‘அன்பின் விழையார்’, ‘பண்பில் மகளிர்’, ‘பொருட் பெண்டிர்’, ‘பொருட்பொருளார்’, ‘பொதுநலத்தார்’, ‘தகைசெருக்கிப் பாரிப்பார்’, ‘நெஞ்சில் பிற பேணிப் புணர்பவர்’ என்று பலவாக எடுத்துரைத்த நம் பேராசான் எட்டாவது பாடலில் ‘மாய மகளிர்’ என்கிறார் வரைவின் மகளிரை.
‘அணங்கு’ என்றால் தேவதை, தெய்வம் என்று பொருள். எதற்கு தெய்வம் என்றால் மோகத்திற்கு, காமத்திற்கு. அணங்கதேவி என்றால் ‘மோகினி’. அணங்கதேவன் என்றால் மன்மதன், காம தேவன். இந்த தெய்வம் தீண்டினால் காம மயக்கம் ஏற்படும் என்பது நம்பிக்கை. மோகினிப் பேய் அடிச்சுடிச்சு என்று சொல்கிறார்களே அது போல.
‘தகை அணங்கு உறுத்தல்’ எனும் அதிகாரத்தின் முதல் பாடல் (நாம் ஏற்கனவேப் பார்த்ததுதான்) மீள்பார்வைக்காக காண்க 28/03/2021 (70).
“அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.” --- குறள் 1081; அதிகாரம்:தகை அணங்கு உறுத்தல்
அணங்குகொல் = இவள் தேவதையோ?; ஆய்மயில் = மயில்களிலே ஆகச்சிறந்த மயிலா?; கனங்குழை மாதர் கொல் = பருத்த கூந்தலை உடைய மானுடப் பெண்ணோ? மாலும்என் நெஞ்சு = (என்னன்னு தெரியலையே) என் நெஞ்சு கிடந்து அடிச்சுக்குதே. நகீ மாலும்!
மோகினிப் பேய்கள் யார் என்று கேட்டால் வரைவின் மகளிர்கள்ன்னு சொல்லலாம் என்கிறார் நம் பேராசான்.
அது ஏன் என்று கேட்டால், அவர்கள்தான் உருவம், சொல், செயலால் மயக்கி கிறங்கடித்து ஆட்டு, ஆட்டு என்று ஆட்டி ஒன்றும் இல்லாமல் செய்துவிடுவார்கள் என்கிறார்.
சரி, யாரை அவர்கள் பிடித்துக் கொள்வார்கள் என்றால் ஆய்ந்து அறியும் அறிவு இல்லாதவர்களைத்தானாம். அதாவது அறிவு கெட்டவர்களை.
உங்களுக்குத்தான் அறிவு இருக்கே அதனால் நீங்க ஏன் அங்கே போகப் போகிறீர்கள் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
“ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு.” --- குறள் 918; அதிகாரம் – வரைவின் மகளிர்
முயக்கு = முயன்று கூடுவது, மயக்கம், தழுவல், தீண்டல்; மாய மகளிர் முயக்கு = வரைவின் மகளிரின் தீண்டல், பீடித்தல்; ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கு என்ப = ஆய்ந்து அறியும் அறிவு இல்லாதவர்களுக்கு அவர்கள்தான் மோகினிப் பேய்.
ஆகையால், அறிவுகெட்டவர்களைத்தான் அது பீடித்துக் கொள்ளும் என்கிறார்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comentarios