21/03/2021 (63)
உஞற்றிலவர்க்கு என்னாகும்? Part 2
உஞற்றிலவர்க்கு குடிப்பெருமையும் கெட்டு குற்றமும் பெருகும்னு குறள் 604 ஐ நேற்று பார்த்தோம்.
முயலாம சோம்பியிருந்தா, என்னாகும்னு மேலும் வள்ளுவப்பெருந்தகை இடிக்கிறார்.
கடுமையான வேலைகளை செய்ய வேண்டி வருமாம், அது மட்டுமில்லை. மற்றவங்க கண்டபடி திட்டவும் செய்வாங்களாம். இதோ அந்த குறள் 607:
“இடிபுரிந்து எள்ளும்சொல் கேட்பர் மடிபுரிந்து மாண்ட உஞற்றி லவர்.” --- குறள் 607; அதிகாரம் - மடியின்மை
மாண்ட உஞற்றி லவர் =பெரு முயற்சி எடுக்காம இருப்பவர்கள்; மடிபுரிந்து = சோம்பித் திரிந்து; இடிபுரிந்து = மற்றோர் இடும் கடுமையான ஏவல்களை செய்வது மட்டுமல்லாமல்; எள்ளும்சொல் கேட்பர் = வசைச் சொற்களுக்கும் ஆட்படுவர்
சோம்பித் திரிந்து பெரு முயற்சி எடுக்காம இருப்பவர்கள் மற்றோர் இடும் கடுமையான ஏவல்களை செய்வது மட்டுமல்லாமல் வசைச் சொற்களுக்கும் ஆட்படுவர்
என்ன மாதிரி பயமுறுத்தறாரு பாருங்க!
‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ – இந்த பழமொழியை இப்படி மாற்றலாம் போல இருக்கு!
‘முற்பகல் சோம்பின் பிற்பகல் எள்ளும்’.
சின்ன வயதுலே கஷ்டப்பட்டு படித்தால் பின்னாடி ஜாலியா இருக்கலாம். முன்னாடி ஜாலியா படிப்பை (படிப்பினையை) கற்றுக்காம விட்டோம்னா பின்னாடி காலி தான்!
வர, வர உலகம் ரொம்பவே மாறிகிட்டு வருது. எல்லா ஆயுதங்களிலும் சிறந்த ஆயுதம் அறிவாயுதம் தான். காலங்கள் வெவ்வேறு படி நிலையை கடந்து ஒரு உச்சத்துக்கு (pinaacle) வந்துவிட்டது. கற்காலத்திலிருந்து உலோகக்காலம், அதிலிருந்து இரும்புக்காலம், மேலும் வளர்ந்து தகவல் காலமாச்சு. அது இன்னும் வளர்ந்து இப்போ உச்சமாக அறிவு சார் (knowledge age – Artificial Intelligence etc.) காலமாயிட்டுது.
அறிவுதான் ஆகப்பெரிய ஆயுதம்னு அண்ணல் வள்ளுவப்பெருமான் ஒரு குறளில் அப்பவே சொல்லியிருக்காராம். கண்டுபிடிப்போம் வாங்க.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comentarios