top of page
Search

இடும்பைக்கு இடும்பை ... 623

Updated: Mar 25, 2023

23/03/2023 (749)

நமது பார்வைகள்தான் (Perceptions) எல்லாவற்றிற்கும் காரணம்.


... விடாமுயற்சியின் இடத்தை இந்த உலகில் எதுவும் பிடிக்க முடியாது;

திறமையால் முடியுமா என்றால் இல்லை; திறமையுள்ள மனிதர்கள் தோற்பது என்பது நாம் காணக்கூடியதே.

மேதைகள் விதிவிலக்கா என்றால் அதுவும் இல்லை; “மேதைகளாக இருப்பதால் மட்டுமே மதிக்கப்படுவதில்லை” என்பது ஒரு பழமொழியாகவே மாறிப்போய் இருக்கிறது.

சரி, ‘படிப்பு’ வெல்லுமா என்றால் அதுவும் இல்லை; ஏன் என்றால், இந்த உலகத்தில் படித்த முட்டாள்கள்தான் ஏராளம்!

உறுதியும் விடாமுயற்சியும் மட்டுமே எல்லாம் வல்லது;

விடாமுயற்சிதான் இந்த உலகில் பல சிக்கல்களை தீர்த்துவைத்துள்ளது, தீர்த்தும் வைக்கும்! --- கால்வின் கூலிட்ஜ்


“Nothing in the world can take the place of persistence.

Talent will not; nothing is more common than unsuccessful men with talent.

Genius will not; unrewarded genius is almost a proverb.

Education will not; the world is full of educated derelicts.

Persistence and determination alone are omnipotent.

The slogan “Press On!” has solved and always will solve the problems of the human race.” --- Calvin Coolidge


துன்பத்திற்கே துன்பம் கொடுப்பவர்கள், துன்பத்திற்கு துன்பப்பட மாட்டார்கள்.


எப்படி துன்பத்திற்கே துன்பம் கொடுப்பது?


எப்படி இருளில் இருந்து கொண்டு இருளோடு போராட முடியாதோ அப்படி!

ஒரு விளக்கை ஏற்று; இருள் ஓடிவிடும். நம்பிக்கை எனும் விளக்கு; முயற்சி எனும் செயல் – இதுதான் முக்கியம்.


பார்வைகள்தான் (Perceptions) எல்லாவற்றிற்கும் காரணம். பார்வைகளை விசாலப்படுத்து. துன்பத்திற்கே துன்பம் கொடுக்கலாம்.


“வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்

ஆழக்கடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்தி வா

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்

பார்த்து நடந்தால் பயணம் தொடரும்

பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்

கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்

காட்சி கிடைத்தால் கவலை தீரும்

கவலை தீர்ந்தால் வாழலாம் ...” --- திரைப்படம் - பலே பாண்டியா (1962), கவியரசு கண்ணதாசனின் வரிகளில், இன்னிசை இரட்டையர்கள் விஸ்வநாதன்-இராமமூர்த்தி இருவரின் இசையில்.

இந்தப் பாடலை நாம் வேறு ஒரு குறளிலும் பார்த்துள்ளோம். காண்க 03/02/2021 (17).


சரி, நாம் குறளுக்கு வருவோம்.


இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு

இடும்பை படாஅ தவர்.” --- குறள் 623; அதிகாரம் இடுக்கணழியாமை


இடும்பைக்கு இடும்பை படுப்பர் = துன்பத்திற்கே துன்பம் கொடுப்பவர்கள்;

இடும்பைக்கு இடும்பை படாஅ தவர் = துன்பத்திற்கு துன்பப்பட மாட்டார்கள்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள் முதலான: www.easythirukkural.com)






2 comentários


Rangarajan Sivaraman
Rangarajan Sivaraman
24 de mar. de 2023

நல்ல சுவரஸ்யமான பதிவு !! மேற்கோள்கள் மிக நன்றாக இருந்தது. Link missing for "03/02/2021 (17)"

Curtir
Mathivanan Dakshinamoorthi
Mathivanan Dakshinamoorthi
24 de mar. de 2023
Respondendo a

சுட்டியதற்கு நன்றி. இணைப்பு இணைக்கப்பட்டுள்ளது.

Curtir
Post: Blog2_Post
bottom of page