இன்பம் ஒருவற்கு இரத்தல் ...1052, 1062
18/01/2022 (327)
இரவு என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் இருக்காம். இரவு என்றால் இராத்திரின்னு நமக்குத் தெரியும்.
இரவு என்றால் மஞ்சள், பிச்சை, இரக்கம், ஒரு வகை பன்றி, இருள்மரம் (ஓரு வகை மரம்) … இப்படியெல்லாம் அர்த்தங்கள் இருக்கு.
இரவி என்றால் சூரியன்; இரவோன் என்றால் சந்திரன்.
‘ர’ என்ற எழுத்து தமிழ் சொற்களில் முதலில் வருவதில்லை என்ற இலக்கணத்தின்படி ‘இ’ என்ற எழுத்தைச் சேர்த்து எழுதுகிறார்கள். ரவி = இரவி. இது இப்போது வழக்கு ஒழிந்துவருகிறது. இது நிற்க.
எதற்கு இந்த தொடக்கம்ன்னு கேட்கறீங்க? இதோ வருகிறேன்.
இரத்தல் அதாவது பிச்சைகேட்டல் என்பது ஒரு இக்கட்டான நிலை.
“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகு இயற்றியான்.” --- குறள் 1062; அதிகாரம் – இரவச்சம்
அதாவது, பிச்சை எடுத்துதான் ஒருத்தனுக்கு சாப்பிடனும்ன்னு ஒரு நிலை இருந்தால் இந்த உலகைப் படைத்தவன்னு சொல்றங்களே அவன் பாழாப் போகட்டும் என்கிறார் நம் பேராசான்.
இப்படிச் சொன்ன நம் பேராசான், இன்பம் எது என்று கேட்டால் இரத்தல் என்றும் சொல்கிறார்! அது எப்போது? அதாவது, ஒருத்தன் ‘ஐயா’ன்னு பிச்சை கேட்க வாயைத் திறக்கும் போதே அந்த சிரமம்கூட வைக்காமல் உடனே ஒருவர் உதவினால் இரத்தல்கூட இண்பம்தானாம்.
“இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.” --- குறள் 1052; அதிகாரம் - இரவு
இப்படி யாராவது இருப்பாங்களா? இருக்காங்களாம். யார் அவர்கள்?
குறிப்பிட்டுச் சொல்லியிருக்காராம். பிச்சை கேட்க மாட்டாங்களாம். மற்றவர்களுக்கு பசி என்றால் தன்னிடம் உள்ளவற்றைக் கொடுப்பாங்களாம். இப்படி ஒரு கேள்வியைப் போட்டுவிட்டு ஆசிரியர் கிளம்பிவிட்டார்.
கண்டுபிடிச்சா கொஞ்சம் சொல்லுங்க.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
