top of page
Search

இன்றி அமையா ... குறள் 961, 656

04/08/2022 (523)

மானம் என்றாலே தன் குடியின் பெருமைதான் என்று புரிந்து கொண்டோம்.

அந்தக் கருத்தை மேலும் தெளிவாக்குகிறார் நம் பேராசான் முதல் மூன்று குறள்களில் – 961,962,963.


அதாவது, தனக்குமட்டும் உயர்வு தரக்கூடிய, கிடைக்க முடியாத சிறப்பு சேரும் வகையில் பொருளும் இன்பமும் வந்தாலும் அதனால் தன் குடிக்கு பெருமை தாழுமேயானால் அந்த வாய்ப்பை தவிர்த்துவிடுங்கள் என்கிறார்.


அதாவது, குடியை கைவிட்டு உன்னை உயர்த்திக் கொள்ளாதே!

“படிப்பதோ கட்டபொம்மன் நூல்; பிடிப்பதோ எட்டப்பனுக்கு வால்” என்ற முறையில் நடந்து கொள்ளாதீர் என்கிறார்.


இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்

குன்ற வருப விடல்.” --- குறள் 961; அதிகாரம் – மானம்


இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் = தமக்கு, தனிப்பட்ட முறையில், இன்றி அமையாச் சிறப்புகளை. அதாவது பொருளோ, இன்பமோ கிடைக்கும் என்றாலும்; குன்ற வருப விடல் = குடிப்பெருமை குன்றுமேயானால் அந்தச் செயல்களைச் செய்யாதீர்கள்; குடிப்பெருமை குன்றுதல் = மானம் போதல்


தமக்கு, தனிப்பட்ட முறையில், இன்றி அமையாச் சிறப்புகளை. அதாவது பொருளோ, இன்பமோ கிடைக்கும் என்றாலும் குடிப்பெருமை குன்றுமேயானால் அந்தச் செயல்களைச் செய்யாதீர்கள்.


நம்மாளு: ஐயா, “குன்ற வருப விடல்” என்று தானே இருக்கு, எப்படி “குடிப்பெருமை குன்ற வருப விடல்” என்று பொருள் எடுப்பது?


ஆசிரியர்: நல்ல கேள்வி. இங்கே குடிப்பிறப்பு என்பது அதிகார முறைமையால் வந்துள்ளது.


வினைத்தூய்மை (66ஆவது) அதிகாரத்தில் ஒரு குறளைப் பார்க்கலாம்.


ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க

சான்றோர் பழிக்கும் வினை.” --- குறள் 656; அதிகாரம் – வினைத்தூய்மை


பெற்றத்தாய் பசியோடு இருக்கிறாள். அவள் உண்டு பல நாட்கள் ஆகிவிட்டது. பெற்றத்தாய் மட்டுமல்ல அவனும் அவன் குடும்பமும் பசியோடுதான் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.


மாற்றான் ஒருவன் வந்து எங்களொடு இணைந்து கொள், உங்களை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றால்?


பசியா? மானமா? பசி வந்திடப் பத்தும் பறக்குமா?


பசி வந்திடப் பத்தும் பறந்தால் அவன் மிகச் சாதாரணமானவன்.


அந்நிலையிலும் நிலை குலையாமல் இருப்பவன் ‘மானவன்’. அதாவது தன் குடிப்பெருமையைக் காத்தவன்.


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன். உங்கள் அன்பு மதிவாணன்.




6 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page