இறந்த வெகுளியின் தீதே ... குறள் 531
Updated: Dec 27, 2022
24/11/2021 (274)
பொச்சாவாமை (54ஆவது) அதிகாரம் பொருட் பாலில், அரசியல் பகுதியில் அமைந்துள்ளது. பொருள் வேண்டுபவர்களும், தலைமைக்கு வர நினைப்பவர்களுக்கும் இது ஒரு முக்கியமான அதிகாரம்.
நம் பேராசான், இந்த அதிகாரத்தின் முதல் குறளிலேயே முக்கியமான குறிப்பை அறிவித்து விடுகிறார்.
கோபம் இருக்கே அது ஓரோவழி பகைவரைக் கொல்லுமாம். அதாங்க, ஓரோவழி என்றால் சில சமயம் (sometimes), எப்பவாவது (கீழே அடிக்கோடு போட்டுக்கோங்க எப்பவாவதுதான்) ! - underline please
அளவிறந்த, அதாங்க அளவில்லாத கோபத்திற்கு இன்னும் effect (தாக்கம்) அதிகம். அது என்ன பண்ணுமென்றால் அடுத்தவனை அழிக்குதோ இல்லையோ நம்மையே அழிச்சுடுமாம். (மறுபடியும் அடிக்கோடு போட்டுக்கோங்க – இது நிச்சயம்) - underline please
இந்த அளவிறந்த கோபத்தைவிட எது மோசம்? ன்னு ஒரு கேள்வியைப் போட்டு பதிலும் சொல்கிறார் நம் வள்ளுவப் பெருந்தகை.
எது பெரிய தீங்கு என்றால் பெருஞ்செல்வம், பேரின்பம், பெருமிதம் (டப்பு, மிதப்பு கெத்து) இதெல்லாம் நமது கடமையை மறக்கச் செய்யுமாம். அந்த மறவிதான் மிகவும் மோசமாம்.
“இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியின் சோர்வு.” --- குறள் 531; அதிகாரம் - பொச்சாவாமை
இறந்த வெகுளியின் தீதே = அளவிறந்த கோபத்தைவிட தீதே; சிறந்த உவகை மகிழ்ச்சியின் சோர்வு = அதிகமான மகிழ்ச்சியால் வரும் மறவி.
இரண்டு முனைகளை ஒரே குறளில் தொடுகிறார் நம் பேராசான். ஒரு முனையில் இல்லையென்பதால் வரும் கோபம்; மறுமுனையில், இருப்பதால் வரும், திமிர். இரண்டுமே மோசம்தான் என்கிறார் நம் வள்ளுவப் பெருமான்.
அதையும் இரண்டு வரியிலேயே பின்னிவிடுகிறார். அந்த இரண்டு வரிக்கு நாம மாய்ந்து மாய்ந்து எழுதுகிறோம்.
“கடுகைத் துளைத்தேழு கடலைப்புகட்டிக்
குறுகத் தறித்த குறள்” --- என்று குறிப்பிடுகிறார் இடைக்காடர் எனும் பெருமகனார்.
“அணுவைத் துளைத்தேழு கடலைப்புகட்டிக்
குறுகத் தறித்த குறள்” --- ஔவை பெருமாட்டி
ஆச்சரியமாகத்தான் இருக்கு.
பாருங்க, சொல்ல வந்ததையே மறந்துட்டேன். அஃதாவது, “சிறந்த உவகை மகிழ்ச்சியின் சோர்வு” தான் பொச்சாப்பிற்கு definition (வரையறை). அது இல்லாமல் இருப்பது பொச்சாவாமை.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
