top of page
Search

ஈன்ற பொழுதிற் ... 69

12/04/2021 (85)

அவளுக்கு அது தெரிந்திருந்தாலும் கூட!


வேளாண்மை என்றால் நிலத்தை ஆளும்தண்மை, வாளாண்மை என்றால் வாளை ஆளும்தண்மை. நிற்க


சான்றாண்மையை பிரித்தால் சான்று + ஆளும் +தண்மை என்று ஆகும். அது என்ன ‘சான்று’? பொதுவாக சான்று என்ற சொல்லிற்கு ஆதாரம், சாட்சி (proof, testimony) என்றெல்லாம் பொருள்படும்.


ஆனால், இங்கே ‘நிறைதல்’, ‘மிகுதல்’ என்ற பொருளில் வருகிறது. சான்றின் வேர்ச்சொல் ‘சால்பு’. சாலுதல் என்றால் நிறைதல், மிகுதல். ‘சாலவும் நன்று’ – என்றால் மிகவும் நல்லது என்று பொருள்படும்.


அது சரி. எதானால் மிகுதல் என்றால் நற்குணங்களால் மிகுந்து இருப்பது.

அந்த குணங்களை ஆளும்தண்மை தான் சான்றாண்மை. அப்பாடா, ஒரு வழியா சொல்லி முடிச்சுட்டேன். எனக்கு மட்டுமில்லை, சான்றாண்மை என்ற சொல்லிற்கு சரியான சொல்லாடல் வேறு பல மொழிகளில் கூட இல்லை என்று அறிஞர் பெருமக்கள் கூறுகிறார்கள்.


நற்குணங்களால் நிறைந்து இருப்பவர்கள் சான்றோர்கள் எனப்படுவர். சான்றாண்மைக்கு வள்ளுவப்பெருமான் தனி ஒரு அதிகாரம் செய்துள்ளார். அது தான் 99 வது அதிகாரம். இதனை எதிர் வரும் நாட்களில் பார்ப்போம். நிற்க.


இல்லறவியலில் இல்வாழ்க்கை (5), வாழ்க்கைத்துணை நலத்தைத் (6) தொடர்ந்து புதல்வரைப்பெறுதல் 7 வது அதிகாரம்.


வாழ்க்கையைத் தொடங்கிய இணையர்கள் வேண்டி விரும்பி எதிர் நோக்குவதும், சுற்றத்தார் ஆவலாக வரவேற்பதும் அவர்தம் மக்கட்பேறு. எல்லாரையும் விட பெருமகிழ்ச்சிக்கு உள்ளாவது அம்மழலையை சுமந்து பெற்ற தாய் தான். அம் மகிழ்ச்சிக்கு ஈடு இணை கிடையாது. ஆனால், அதே தாய், பெற்ற போது தான் உற்ற மகிழ்ச்சியை விட பெருமகிழ்ச்சி அடைவாளாம்!


எப்போது என்றால், தம்மக்களை சான்றோன் எனக் கேட்டால். இருக்காதா பின்னே!


நம்ம எல்லாருக்கும் தெரிந்த குறள் தான்:


ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்.” --- குறள் 69; அதிகாரம் - புதல்வரைப் பெறுதல்

தாய் தன்மகனை = தாய் தம் மக்களைப்; ஈன்றபொழுதிற் பெரிதுவக்கும் = பெற்ற பொழுதினில் பெற்ற உவகையைவிட மேலான பேருவுவகை அடைவாளாம்; தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட = தம் மக்களை ‘சான்றோர்கள்’ என அறிவுடையோர் சொல்லக் கேட்கும் பொழுது.

அது என்ன கேட்ட தாய்? அவளாக அறிந்துகொள்ள மாட்டாளா? அதுவும் கூடும். நிற்க.


தாய் எட்டு அடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயனும்னு நினைப்பவள் தாய். அந்தப் பாய்ச்சலை கண்டுற்ற தம்மினும் மேலோர்கள், அறிவுடையர்கள் சொன்னால் அதை அந்தத் தாய் கேட்டால் அடையும் மகிழ்ச்சிக்கு அளவு இருக்கும்னு நினைக்கறீங்க்க? அவளுக்கு அது தெரிந்திருந்தாலும் கூட!


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.


உங்கள் அன்பு மதிவாணன்




Post: Blog2_Post
bottom of page