16/12/2023 (1015)
அன்பிற்கினியவர்களுக்கு:
உயிர் உடம்பில் இருக்கிறது என்பதையே அன்பைக் கொண்டுத்தான் அளக்கணும். அன்பு இல்லை என்றால் அந்த உடம்பு வெறும் தோல் போர்த்திய ஓர் உடம்புன்னு நினைக்க வேண்டியதுதான்! என்று அன்பின் வழியை இல்லறத்தில் வலியுறுத்தினார். காண்க 13/03/2021, 06/01/2023. மீள்பார்வைக்காக:
அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு. – 80; - அன்புடைமை
துறவறத்தில் உள்ளவர்க்கு அருளுடைமைதான் நெறி. எனவே, ஊன் உண்ணாமையில் உள்ளது உயிர்நிலை என்கிறார். ஊன் உண்ணாமல் இருந்தால் அருள் நிறைந்த உயிர் உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருக்கும். இஃது, இரு உயிர்களுக்கும் பொருந்தும். உண்ணாமல் இருப்பவரின் உயிர்; உண்பதைத் தவிர்ததனால் பிழைத்த உயிர்.
ஓய்வெடுக்கும் பருவத்தில் கொல்லாமையும், ஊன் உண்ணாமையும் மிக முக்கியம். அவ்வாறு இல்லையென்றால் துன்பமென்னும் புதைகுழியில் ஆழ்ந்து அதிலேயே சிக்கிக்கொள்ள வேண்டும் என்கிறார்.
அளறு என்றால் புதைகுழி, நரகம். அண்ணாத்தல் என்றால் வாய் திறத்தல். கொல்லுதல், ஊன் உண்ணுதல் என்னும் புதைகுழியில் ஆழ்ந்துவிட்டால் அதிலிருந்து ஒருவர் தப்ப அது ஒரு போதும் வாய் திறவாதாம்.
நம்மாளு மனசுக்குள்ளே: … என்ன செய்ய? புலால் ருசி அப்படி!
உண்ணாமை யுள்ள துயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யா தளறு. – 255; - புலால் மறுத்தல்
உயிர்நிலை ஊன் உண்ணாமை உள்ளது = உயிரானது ஊன் ஊண்ணாமையால் இருக்கிறது; ஊன் உண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு = ஊன் உண்ணல் என்னும் புதை குழியில் வீழ்ந்துவிட்டால் அதிலிருந்து மீள அது வழி கொடுக்காது.
உயிரானது ஊன் ஊண்ணாமையால் இருக்கிறது. ஊன் உண்ணல் என்னும் புதைகுழியில் வீழ்ந்துவிட்டால் அதிலிருந்து மீள அது வழி கொடுக்காது.
இதில் இன்னுமொரு பொருளும் இருக்கலாம். புதைகுழி என்றால் இடுகாடு (burial ground) என்றும் பொருளுண்டு. அது வெளியேவர மீண்டும் வாயைத் திறக்குமா என்ன? ஊன் உண்டால் நாமே ஒரு இடுகாடு! இடுகாட்டிற்குள் இருக்கும் இடுகாடு!
அஃதாவது, ஊன் உண்பதைத் தவிர்க்காமல் தொடர்ந்து உண்டால் அது புதைக் குழி போல மீள முடியா ஆழத்தில் அழுத்திவிடும். ஆகவே, தக்கப் பருவத்தில், அதிலிருந்து மீண்டுவிட வேண்டும். அது எந்தப் பருவம் என்றால் அஃது அவர் அவர் மன நிலையைப் பொறுத்தது.
ஆனால், எல்லார்க்கும் பொதுவானது, நம் பேராசான் சொல்வதும் அஃதே. எதுவென்றால் வயதானால் சற்று ஒதுங்கிவிடுங்கள். அவ்வளவே.
எந்த எந்தப் பொருள்களிலிருந்து ஆசையை நீக்குகிறோமோ அந்த அந்தப் பொருள்களால் வரும் துன்பம் இல்லை. காண்க 28/02/2021.
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன். - 341; துறவு
நன்றாக ஆடி ஓடி உழைக்கும் பருவத்தில் உடல் எதையும் ஏற்றுக் கொள்ளும். ஓய்வெடுக்கும் பருவம் வரும்போதுதான் தெரியும் அவற்றின் விளைவு!
அப்போதும்கூட நான் என் வாயைக் கட்டமாட்டேன் என்றால் ஒன்றும் கவலையில்லை. அதற்குதானே மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பங்கிற்கு மருந்துகளையும் சேர்த்து உண்ணச் சொல்வார்கள். அவ்வளவே.
ஏன் சார் சரியாக மாட்டேங்குது என்றால் என்ன செய்ய என்பார்கள். நீங்கள் செய்து வைத்துள்ளவை அப்படி என்று நம் தலையிலேயே கட்டுவார்கள். ஆனால், போகும்போது மறக்காமல், அந்த ஆலோசனைக் கட்டணத்தைக் (Consulting fees) கட்ட மறந்துடாதீங்க என்பர். அதுமட்டுமல்ல, அடுத்த மாதமும் வரவேண்டும் என்பர்! வரும்போது அந்தச் சோதனைகளைச் செய்துட்டு வாங்க என்பர். என்ன ஒரு சோதனை! இதுதான் புதைகுழி.
சரி, புலாலை மறுத்தால் மூப்பு வராதா? என்றால் நிச்சயம் வரும். ஆனால், அது கொஞ்சம் நிம்மதியாக வரலாம். அவ்வளவே.
எப்படி உங்க வசதி? என்கிறார்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments