உள்ளியது எல்லாம் உடன் எய்தும் ... குறள் 309
01/12/2021 (281)
தொடர்ந்து சிந்தித்து செயல்பட்டால் உள்ளியது எளிதில் கிடைக்கும் என்றார் குறள் 540 (அதிகாரம் - பொச்சாவாமை).
அது சரி. எனக்கு உடனே கிடைக்கனும். அது முடியுமா?
வெற்றிக்கும் அவசரத்துக்கும் ஆகாது. ‘பதறினக் காரியம் சிதறும்’ என்பதைப் போல பதட்டப்பட்டா வேலைக்கு ஆகாது. ஒரு காரியம் நடக்கலைன்னு கோபம் வரும். அதுதான் முதல் எதிரி. அதாவது வெற்றிக்கு எதிரி கோபம். இதைத்தான் அந்தக் காலத்தில் ‘வெகுளி’ன்னு சொல்லியிருக்காங்க.
என்னடா, சும்மா நீட்டி முழக்கறானேன்னு நினைக்காதீங்க. கோபப்படாம கேளுங்க.
மனசிலே கோபத்தை வைத்துவிட்டால் அவ்வளவுதான். வேற எதுவுமே தெரியாது. நம்ம உடம்பு நம்ம கட்டுப்பாட்டில் இருக்காது. மூச்சுக்காற்று வேக வேகமாக போகும், உடம்பு அதிரும், இன்னும் என்ன என்னவோ தானாகவே நடக்கும். அப்புறம் வருந்தவேண்டியதாக இருக்கும்.
என்னப்பா, உடனே கிடைக்கனும்ன்னு ஒரு கேள்விதானே கேட்டேன்! அதற்கு இவ்வளவு நீட்டுகிறாயே சரியா?ன்னு கேட்கறீங்க. பொறுப்பீர்.
நான் சொல்லலைங்க. நம்ம வள்ளுவப்பெருமான்தான் சொல்லியிருக்கார்.
நினைத்தது உடனே நடக்கனுமா, உள்ளத்தில் கோபத்தை வைக்காதே என்கிறார். அந்தக் கோபம் எதனாலே வேண்டுமானுலும் இருக்கலாம். Effet (தாக்கம்) ஒன்றுதான்.
“உள்ளியது எல்லாம் உடன் எய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.” --- குறள் 309; அதிகாரம் – வெகுளாமை
உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின் = சினத்தை உள்ளத்தால் ஒருகாலத்திலும் தீண்டாதவன் என்றால்; உள்ளியது எல்லாம் உடன் எய்தும் = (அவன்) நினைத்தது எல்லாம் உடனே கிடக்கும்.
மேலோட்டமாக நாம நினைத்தது நடக்கும் என்பது பொருள். ஆனால், இந்தக் குறள் சொல்ல வருவது மிக ஆழமானக் கருத்து. இந்தக் குறள் அமைந்துள்ள இடம் துறவறவியல். அதாவது நம் மனதில் இல்லறத்தால் ‘அன்பு’ மலர்ந்து, அது வளர்ந்து மனதில் ‘அருள்’ தோன்றியுள்ளக் காலம்.
நாம ஏற்கனவே பார்த்துள்ளோம். அன்பு என்பது நம்முடன் தொடர்பு உடையவர்களிடம் செலுத்துவது. அருள் என்பது எல்லாரிடமும் அன்புடன் இருப்பது. கோபம் போயிட்டா உள்ளம் ‘அருளுடை உள்ளம்’ ஆகிடும். அதாவது, இந்த ஒரு நிகழ்வாலே இம்மை, மறுமை, வீடு எல்லாமே ஒன்றாக கிடைக்கும் என்கிறார் பேராசான். அதைத்தான் ‘உடன்’ என்கிறார். ஒன்றுக்கு மூன்று இலவசம்! கோபத்தை தவிர்ப்பது வளர்ச்சி.
மீண்டும் முதல் வரியைப் படிங்க.
நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
