top of page
Search

உழுவார் உலகத்தார்க்கு ஆணி ... குறள் 1032

15/01/2022 (324)

உழவின் சிறப்பை முதல் குறளில் சொன்ன நம் பேராசான், அடுத்த ஐந்து குறள்களில் உழவரின் சிறப்புகளை வரிசைப் படுத்துகிறார்.


‘உழுபவன் கணக்கு பார்த்தால் உழக்குகூட* மிஞ்சாது’ என்று ஒரு பழமொழி இருக்கு. உழுபவன் கணக்கு பார்ப்பதில்லை. அவன், இல்லை, இல்லை, அவர் கணக்கு பார்த்தால் ஒன்று அவர் அத்தொழிலை கைவிட நேரிடும். மற்றொன்று, நமக்கும் உழக்கு அரிசி வாங்கவும் முடியாது.


எல்லோராலும் உழவு செய்திட முடியாது. ஏன், எல்லோராலும் எல்லாமும் செய்திட முடியாது. உழவைத்தவிர உள்ளத் தொழில்களும் அவசியமானதே!

என்ன ஒரு வித்தியாசம், மற்றவர்களும் அவர்களின் தொழிலை கவலையின்றித் தொடர உழவர்கள் அவர்கள் தொழிலைத் தொடரவேண்டும்.


அவர்கள், சேற்றில் கை வைக்கவில்லை என்றால் நாம் சோற்றில் கை வைக்க இயலாது. உழவரைத் தவிர்த்த உலகத்தாருக்கு அவர்கள் தான் அச்சாணி (pivot).


அதைத்தான் நம் பேராசான் இவ்வாறு சொல்கிறார்:


உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃது ஆற்றாது

எழுவாரை எல்லாம் பொறுத்து.“--- குறள் 1032; அதிகாரம் – உழவு


அஃது ஆற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து = உழவினைச் செய்யாது பிறத் தொழில்களை மேற்கொள்பவர்களையும் காப்பாற்றிக் கொண்டு செல்வதால்; உழுவார் உலகத்தார்க்கு ஆணி = உழுபவர்கள் உலகத்தாராகிய தேருக்கு அச்சாணி போன்றவர்கள்.


இலக்கணக் குறிப்பு: அச்சாணி என்று மட்டும்தான் நம்பெருமான் சொல்லி விட்டுவிட்டார். நாம்தான், அதை விரித்து தேருக்கு அச்சாணி என்று உவமையை முழுதாக்கி பொருள் கொள்கிறோம்.


இவ்வாறு ஒன்றை மட்டும் சொல்லி மற்றொன்றை சொல்லாமல் உருவகப் படுத்துவது ‘ஏகதேச உருவகம்’ என்றார் என் ஆசிரியர். கேட்டு வைப்போம்.


*உழக்கு என்பது ஒரு முகத்தல் அளவை.


முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு/செவிடு

ஐந்து சோடு = ஒரு ஆழாக்கு (168ml)

இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு (336 ml)

இரண்டு உழக்கு = ஒரு உரி (672 ml)

இரண்டு உரி = ஒரு படி அல்லது நாழி (1.344 litre)

எட்டு படி = ஒரு மரக்கால் அல்லது குறுணி (10.752 litre)


இப்படி போகுது, இதற்கு ஒரு தனி ஆராய்ச்சி பண்ணனும் …


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.






22 views1 comment
Post: Blog2_Post
bottom of page