14/11/2022 (620)
தடைகளைத் தகர்த்தெறி என்றால் தடைகளை உடை என்று பொருள்.
‘தகர்’ என்றால் ‘உடை’ என்று நமக்குத் தெரியும். தகர் என்றால் “ஆடு” என்றப் பொருளும் இருக்கிறதாம்.
தமிழில் “பொரு” என்ற ஒரு சொல் இருக்கு. அதற்கு “ஒப்பு” என்ற ஒரு பொருள் இருக்காம்.
“பொரு தகர்” என்றால் ‘ஆட்டினைப் போலே’ என்று பொருள்.
எந்த ஆடு?
தாக்கி முட்டவரும் ஆடாம்! (பொருகின்ற தகர் என்றால் போர் செய்கின்ற ஆடு என்றும் அறிஞர் பெருமக்கள் பொருள் சொல்கிறார்கள்)
யாரைத் தாக்க வரும் ஆடு?
வம்புக்கிழுக்கும் பகையை.
எப்படித் தாக்குமாம்?
சற்று பின் வாங்கி, பின் வேகமாக வந்து தாக்குமாம்.
இந்த உவமையை நம் பேராசான் பயன் படுத்துகிறார்.
எப்படி என்றால், தக்க காலத்தை எதிர் நோக்கி ஒடுங்கியிருப்பவனின் ஒடுக்கம் எப்படிப்பட்டது என்றால், தன் பகையைத் தாக்க வரும் ஆடானது தாக்குவதற்கு முன் எப்படி சற்று பின்வாங்கி நின்று ஒடுங்குமோ அதற்கு ஒக்கும் என்கிறார்.
“ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேரும் தகைத்து.” --- குறள் 486; அதிகாரம் – காலமறிதல்
ஊக்கம் உடையான் ஒடுக்கம் = ஊக்கம் கொண்டு, ஒரு குறிக்கோளை அடையவேண்டும் என்று தக்கத் தருணத்தை பார்த்து இருப்பவனின் ஒடுக்கம்;
பொருதகர் தாக்கற்குப் பேரும் தகைத்து = தாக்க வரும் ஆடானது எப்படி பின் வாங்கி ஒடுங்கி நிற்குமோ அதைப் போலே
தாக்க வரும் ஆடானது எப்படி சற்று பின் வாங்கி ஒடுங்கி நிற்குமோ அதைப் போலே ஊக்கம் கொண்டு, ஒரு குறிக்கோளை அடையவேண்டும் என்று தக்கத் தருணத்தை பார்த்து இருப்பவன் ஒடுங்கி இருப்பான்.
பதுங்குவது பாய்வதற்கே!
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
உங்கள் அன்பு மதிவாணன்
ความคิดเห็น