top of page
Search

ஊதியம் ... 231, 831, 839, 797

19/12/2021 (299)

நட்பு கொள்ள வேண்டியவர்கள் யார் என ஆராய நான்கு குறள்களை (793.794, 795 & 796) தொகுத்திருந்தார் நம் பேராசான். அடுத்து வரும் மூன்று தவிர்க்க வேண்டியவர்கள் யார் என எடுத்துக் காட்டுகிறார். அந்தக் குறளைப் பார்ப்பதற்கு முன்னாடி ஒரு சுற்று சுற்றிவிட்டு வருவோம்.


நாம் ஏற்கனவே ஒரு குறளைப் பார்த்துள்ளோம். அதாவது, உயிருக்கு ஊதியம் எது என்ற குறள். மீள்பார்வைக்காக:


ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு.” --- குறள் 231; அதிகாரம் – புகழ்

விளக்கம் – காண்க 28/06/2021 (126)


ஈதலும் இசைபட புகழுடன் வாழ்வதும்தான் உயிருக்கு ஊதியம். அந்த ஊதியம் சரிவர கிடைக்க வேண்டுமென்றால் பேதையார் நட்பை விட்டுவிட வேண்டுமாம்.


பேதைமைக்கும் ஊதியத்திற்கும் சம்பந்தம் ரொம்பவே இருக்கு போல. இன்னும்மொரு குறளில் (காண்க 13/11/2021 (263))


பேதைமை என்பதுஒன்று யாதுஎனின் ஏதம்கொண்டு

ஊதியம் போக விடல்.” --- குறள் 831; அதிகாரம் - பேதைமை


மேலும் சொல்கிறார், பேதையார் நட்பில் ஒரு சிறப்பு இருக்காம். அப்படியா?

அது என்னவென்றால் அதை விட்டுவிட்டால் நமக்கு ஒரு தீமையும் வராதாம். நன்மைதான் வரும் என்பது சொல்லாமல் சொல்லி வழிகாட்டுகிறார். அதைப் போல ஒரு இன்பம் இல்லையாம்.


பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்

பீழை தருவதொன்று இல்.” --- குறள் 839; அதிகாரம் – பேதைமை


பீழை = துன்பம்; பிரிவின்கண் பீழை தருவது ஒன்று இல் = பிரிவின் போது துன்பம் ஒன்றும் தருவது இல்லையாம்; பேதையார் நட்பு பெரிது இனிது = (ஆகையால்) பேதையர் நட்புகூட ரொம்பவே இனிதாம்


என்ன ஒரு கிண்டல். இந்த மாதிரி நக்கலாக விள(ல)க்க யாராலே முடியும்!

சரி, மீண்டும் நாம் நட்பாராய்தலுக்கு வருவோம்.


ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்

கேண்மை ஒரீஇ விடல்.” --- குறள் 797; அதிகாரம் – நட்பாராய்தல்


ஒருவற்கு ஊதியம் என்பது = ஒருவனுக்கு ஊதியம் என்று சொல்லப்படுவது; பேதையார் கேண்மை ஒரீஇ விடல் = அறிவில்லாதவர்களின் நட்பை உடனே விட்டு விலகுதலாம்.


இன்றைக்கு ரொம்ப அடுக்கிட்டேன், இது ஒரு தொடர்பு இருப்பதனால்.

மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.





25 views2 comments
Post: Blog2_Post
bottom of page