top of page
Search

ஒண்ணுதற் கோஓ ... 1088

02/09/2022 (552)

ஒண்ணுதற் கோஓ உடைந்ததே ஞாட்பினுள்

நண்ணாரும் உட்குமென் பீடு.” --- குறள் 1088; அதிகாரம் -தகை அணங்கு உறுத்தல்


பொருள் விளங்குகிறதா? நிச்சயமாக இல்லை.


இந்தக் குறளில் ‘உடைந்ததே’ மற்றும் ‘பீடு’என்ற சொற்களைத் தவிர மற்ற சொற்கள் தற்போது வழக்கத்தில் இல்லை. பயன்படுத்தாத எதுவும் அழியும். அது தமிழுக்கும் பொருந்தும். இது நிற்க.


நாம் குறளுக்கு வருவோம்.


ஒண்ணுதல்கோஓ = ஒள்+நுதல்+கோ+ஓ என்று பிரியும்.

ஒள் = ஒளி பொருந்திய; நுதல் = நெற்றி; கோ என்றால் (அதற்)கோ என்கிறோமே அதைப்போல. அதாவது, ‘ஒண்ணுதல்கோ’ என்றால் ‘ஒளி பொருந்திய உன் நெற்றிக்கோ’ என்று பொருள். இறுதியில் வரும் ‘ஓ’ அதை அழுத்திச் சொல்லவரும் வியப்பின் குறிப்பு.


சரி, அடுத்து ஞாட்பு. ஞாட்பு என்றால் போர்களம். ‘உட்கும்’ என்றால் ‘அஞ்சும்’, உள்ளே ஒரு நடுக்கம் ஏற்படும் என்று பொருள். ‘பீடு’ என்றால் பெருமை.


போர்களத்துக்கு வந்தவர்களுக்கு எனது திறமை, வலிமை தெரியும். உனக்கு ஒன்று தெரியுமா? களத்திற்கு வராதவர்களுக்கும் எனது திறமை அதைவிட அதிகம் தெரியும்.


“என் பேரைச் சொன்னா வயித்திலே இருக்கும் குழந்தைகூட, ஒரு கையாலே தன் வாயைப் பொத்திட்டு, இன்னொரு கையாலே அது அம்மா வாயையும் பொத்தும்” என்பதைப் போல!


ஆனால், இப்போ என்ன நிலைமை? எனது திறமை, வலிமை, பெருமை எல்லாம் உன் நெற்றிக்கு முன்னால் உடைந்து கிடக்கிறது.


மீண்டும் ஒரு முறை அந்தக் குறளைப் பார்ப்போம்.


ஒண்ணுதல்கோஓ உடைந்ததே ஞாட்பினுள்

நண்ணாரும் உட்கும் என் பீடு.” --- குறள் 1088; அதிகாரம் -தகை அணங்கு உறுத்தல்


ஒண்ணுதல்கோஓ = அழகான உன் நெற்றிக்கோ; உடைந்ததே = நொறுங்கியதே; ஞாட்பினுள் நண்ணாரும் = போர்களத்துக்கு வராதவர்களும்; உட்கும் என் பீடு = நடுங்கும் எனது வலிமை.


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.


உங்கள் அன்பு மதிவாணன்




5 views0 comments
Post: Blog2_Post
bottom of page