18/10/2023 (956)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
இழுக்கம் இழி பிறப்பாய்விடும் என்றதனால் அதனால் வரும் துன்பங்களை உணர்ந்து ஒழுக்கத்தில் இருந்து ஒருபோதும் விலகமாட்டார்கள் மனத் திண்மையுடையவர்கள் என்கிறார் நம் பேராசான்.
உரவோர் என்றால் நெஞ்சில் உரம் கொண்டோர்; ஒல்கார் என்றார் விலகி ஓடாதவர்கள், தளராதவர்கள் என்று பொருள். நாம் முன்பு ஒரு குறளைப் பார்த்துள்ளோம். காண்க 22/02/2023 (720). மீள்பார்வைக்காக:
“சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதைஅம்பின்
பட்டபாடு ஊன்றும் களிறு.” --- குறள் 597; அதிகாரம் – ஊக்கம் உடைமை
யானையானது அம்புகள் கொத்து கொத்தாகத் தன்னைத் தாக்கினாலும் தளராது முன்னேறி நிற்கும், தாக்கும். அது போல, உள்ளத்தில் உரமுள்ளவர்கள் தாம் தாக்கப்படும் போதும் தளரமாட்டார்கள்; முன்னேறுவார்கள்.
“ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.” --- குறள் 136; அதிகாரம் – ஒழுக்கமுடைமை
இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து = ஒழுக்கத்திலிருந்து விலகுவதால் ஏற்படும் குற்றங்களும் அதனால் நிகழும் துயரங்களையும் அறிந்து;
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் = ஒழுக்கத்திலிருந்து விலகமாட்டார்கள் மனத் திண்மையுடையவர்கள். ஏதம் = குற்றம்; படுபாக்கு = படுத்தும் பாடு
அஃதாவது, ஒழுக்கத்திலிருந்து விலகாதவர்கள்தாம் மனத்திண்மை உடையவர்கள் என்பது கருத்து.
அழுக்காற்றிற்கும் ஒழுக்கத்துக்கும் தொடர்பு உண்டு என்று கண்டோம். “ஏதம் படுபாக்கு அறிந்து” என்று குறள் 136 இன் இரண்டாம் அடியில் சொன்னதைப் போலவே குறள் 164 இலும் எடுத்து வைக்கிறார்.
“அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக் கறிந்து.” --- குறள் 164; அதிகாரம் – அழுக்காறாமை
இழுக்காற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து = பொறாமை என்னும் இழிந்த வழியால் ஏற்படும் குற்றங்களும் அதனால் நிகழும் துயரங்களையும் அறிந்தவர்கள்; அழுக்காற்றின் அல்லவை செய்யார் = பொறாமை கொண்டு அறமல்லாதவற்றைச் செய்யார்.
பொறாமை ஒழுக்கத்தைச் சிதைக்கும். ஒழுக்கமின்மை குடியையே படுகுழிக்குள் தள்ளும்.
“அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.” --- குறள் 168; அதிகாரம் – அழுக்காறாமை
அழுக்காறு என ஒரு பாவி = பொறாமை என்ற ஒரு பொல்லாத குணம்; திருச் செற்றுத் = கொண்ட செல்வத்தையெல்லாம் அழித்து; தீயுழி = தீமையென்னும் படு குழிக்குள்; உய்த்து விடும் = தள்ளிவிடும்.
பொறாமை என்ற ஒரு பொல்லாத குணம், கொண்ட செல்வத்தையெல்லாம் அழித்து, தீமையென்னும் படு குழிக்குள் தள்ளிவிடும்.
பொறாமையைத் தவிர்த்தாலே உயரலாம்.
“பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தலும் இலமே” என்றார் கணியன் பூங்குன்றனார்.
அப்படி, அப்படியே ஏற்றுக் கொள்வோம். ஏற்றுக் கொண்டால், வாழ்க்கை,
“நீர் வழி படுவும் புணை போல ஆர் உயிர் முறை வழி படுவும்” என்றும் சொன்னார் நம் பூங்குன்றனார்.
பொறாமையையும் தாழ்வு மனப்பான்மையும் விடவிட வாழ்க்கை ஓடுகின்ற ஆற்றில், அதன் திசையிலேயே, செல்லும் படகினைப் போல சுலபமாகவும், இனிமையாகவும் பயணம் இருக்கும்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comentarios