top of page
Search

ஒழுக்காறாக் கொள்க ... 161, 35

01/11/2023 (970)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

பொறையுடைமையை அடுத்து அழுக்காறாமை அதிகாரத்தை வைக்கிறார். அழுக்காறு என்பது ஒரு சொல். அழுக்காறு என்றால் பிறரின் வளர்ச்சியைக் கண்டு வெம்புவது, வெறுப்பை வளர்த்துக் கொள்வது. அஃதாவது, பொறாமை.

பொறுமைக்கு எதிர்ச்சொல் பொறாமை.


ஒருவர் நமக்குத் தீங்கு செய்தால் நமக்குத் தேவையானது பொறுமை, பொறையுடைமை.

மற்றவர் வளர்ச்சியைக்கண்டு மனம் வெம்பாமல் இருப்பது அழுக்காறாமை.


அழுக்காறாமை = அழுக்காறு+ஆ+மை. ஆ – எதிர்மறை ஆகாரம்.


அறன் வலியுறுத்தல் அதிகாரத்தின் ஐந்தாவது குறளில் அழுக்காற்றை விலக்க வேண்டும் என்று கோடிட்டுக் காட்டினார். காண்க 20/02/2021 (34). மீள்பார்வைக்காக:


“அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்” --- குறள் 35; அதிகாரம் – அறன் வலியுறுத்தல்

விலக்க வேண்டிய நான்காவன: அழுக்காறு, பேராசை, கோபம், கடுஞ்சொல். இவற்றை விலக்கினால் அஃதே அறம்.


அழுக்காறு இல்லாத இயல்பை ஒழுக வேண்டும் என்கிறார்.


ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்

தழுக்கா றிலாத இயல்பு.” --- குறள் 161; அதிகாரம் – அழுக்காறாமை


ஒருவன் தன்நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு = ஒருவன் தன் மனத்தில் பொறாமை எழாமல் இருக்கும் இயல்பினை; ஒழுக்காறாக் கொள்க = பேண வேண்டிய ஒழுக்கமாகக் கொள்க.


ஒருவன் தன் மனத்தில் பொறாமை எழாமல் இருக்கும் இயல்பினைப் பெற பேண வேண்டியவற்றை ஒழுக்கமாகக் கொள்க.


அதுமட்டுமல்ல, மனத்தில் பொறாமை இல்லாமல் இருப்பதே நாம் பெற்றுள்ளப் பேறுகளில் பெரும் பேறு என்கிறார்.


நாளைத் தொடர்வோம்.

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.







Comments


©2021 by தினமும் திருக்குறள்.

bottom of page