top of page
Search

ஓஒதல் வேண்டும் ... 653, 971, 556

22/04/2023 (779)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

கடிந்த வினைகளைச் செய்தால், அவைதாம் முடிந்தாலும் பீழை தரும் என்றார் குறள் 658 இல், அதாவது, விலக்க வேண்டியச் செயல்களைச் செய்தால் அவைதாம் துன்பம் தரும்.


வழக்கு மொழியில், “செய்வினைச் செய்த்துட்டான்” என்பார்கள். அதாவது, பில்லி, சூனியம், ஏவல் போன்றவைகளைச் ‘செய்வினை’ என்பார்கள்.


“சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டான்” என்ற வழக்கு மொழி இருப்பதும் நமக்குத் தெரியும்.


“செய்வினை” என்றாலே தவிர்க்க வேண்டியவை, விலக்க வேண்டியவை, அறமற்றவை என்று பொருள்.


நம்ம பேராசான் “ஒளிமாழ்கும் செய்வினை” என்கிறார். ஒளிமாழ்கும் என்றால் ஒளி குன்றி இளி பிறக்கும். இளி என்றால் இழிவு.


ஒளி என்றால் பெருமை (Image). நாம் வாழும் காலத்திலேயே கிடைப்பது ஒளி; நாம் மறைந்தப் பின் நிலைப்பது புகழ் என்று நுண்ணிய வேறுபாட்டினை அறிஞர் பெருமக்கள் எடுத்துச் சொல்கிறார்கள்.


நாம், ‘பெருமை’ என்ற, 98ஆவது அதிகாரத்தில், ஒரு பாடலைப் பார்த்துள்ளோம். காண்க 16/08/2022 (535), 13/01/2023 (680). மீள்பார்வைக்காக:


ஓளி ஒருவற்கு உள்ள வெறுக்கை இளி ஒருவற்கு

அஃது இறந்து வாழ்தும் எனல்.” --- குறள் 971; அதிகாரம் – பெருமை


உள்ள வெறுக்கை = ஊக்க மிகுதி; ஒளி = பெருமை; ஓளி ஒருவற்கு உள்ள வெறுக்கை = ஒருவற்கு பெருமை என்பது தன் குடியை முன்னேற்றுவோம் என்ற ஊக்க மிகுதியே; இளி ஒருவற்கு அஃது இறந்து வாழ்தும் எனல் = அவ்வாறில்லாமல்கூட வாழலாம் என்பது ஒருவற்கு இழிவானது.


எது ‘ஒளி’ என்பதற்கு இன்னுமொரு குறளையும் பார்த்துள்ளோம். மீண்டும் காண்க 13/01/2023 (680). மீள்பார்வைக்காக:


மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்

மன்னாவாம் மன்னர்க்கு ஒளி.” --- குறள் 556; அதிகாரம் – கொடுங்கோன்மை


மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை= தலைமைக்கு நீடித்த புகழ் இருக்க வேண்டும் என்றால் செய்யவேண்டியது செங்கோன்மை;

அஃதின்றேல் மன்னாவாம் மன்னர்க்கு ஒளி = அப்படியில்லை என்றால் அதாவது கொடுங்கோன்மையைக் கடைபிடித்தால் தலைமைக்கு புகழும் பெருமையும் வந்து சேராது.


சரி, நாம் இன்றையக் குறளுக்கு வருவோம்.


ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை

ஆஅதும் என்னு மவர்.” --- குறள் 653; அதிகாரம் – வினைத்தூய்மை


ஓவுதல் = தவிர்த்தல்; ஓதல் என்பது இடை குறைந்து, ஓஒதல் என்று அளபெடுத்து வந்துள்ளது - அதனின் முக்கியத்துவத்தை உணர்த்த! ஆதும் = நாம் செய்யும் செயல்கள் மேலே உயருவதாக ஆகட்டும், நன்மையாக மலரட்டும் என்று பொருள். ஆதும் என்பது ஆஅதும் என்று அளபெடுத்து நின்றது.


ஆதும் என்னுமவர் = நல்லவைகள் நிகழ வேண்டும் என்று எண்ணுபவர்கள்; ஒளிமாழ்கும் செய்வினை ஓவுதல் வேண்டும் = பெருமையைக் குலைக்கும் செயல்களைச் தவிர்த்தல் வேண்டும்.


நல்லவைகள் நிகழ வேண்டும் என்று எண்ணுபவர்கள், பெருமையைக் குலைக்கும் செயல்களைத் தவிர்த்தல் வேண்டும்.


“ஓஒதல்வேண்டும்” என்பதை ஒரு சொல்லாகப் பாவிக்க வேண்டும் என்கிறார் பரிமேலழகப் பெருமான்.


இது நிற்க.


கிறுஸ்துவம், யூதம், இஸ்லாம் போன்ற மார்க்கங்களில் “ஆமென்” என்ற ஒரு புனிதச் சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். அதாவது, “அப்படியே ஆகட்டும்”, “நல்லதே நிகழட்டும்”, “உண்மையாக”, “நிச்சயமாக” என்று பொருள்.


ஆ(அ)தும் என்பதும் அவ்வாறே என்று நினைக்கிறேன்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Komentarze


Post: Blog2_Post
bottom of page