01/09/2022 (551)
ஆண் யானைகளுக்கு கண்களில் இருந்தும், கண்களுக்கும் காதுகளுக்கும் இடைப்பட்ட இடத்தில் இருந்தும் நமக்கு நன்றாக தெரிகின்ற வகையில் ஒரு நீர் சுரக்கும்.
அதற்கு மத நீர் என்று பெயர். ஆங்கிலத்தில் MUSTH என்று அழைக்கப் பெறுகிறது. இது பாலுனர்வைச் சார்ந்தது. இந்த மத நீரைக் குடிக்க வண்டுகள் வருமாம். இதனைக் குடிக்கும் வண்டுகள் அதிக காலம் வாழலாமாம். நம் தமிழ் இலக்கியங்களில் குறிப்பு இருக்கின்றது.
மத நீர் சுரப்பது, மதம் பிடிப்பதற்கு அறிகுறி. வண்டுகளின் தொந்தரவு வேறு.
அதன் பார்வை இங்கும், அங்கும் ஒடுமாம். அதனைக் கட்டுப்படுத்த ‘கண் படாம்’ என்ற ஒரு மறைப்பை அதன் கண்களை சிறிது மறைக்கும் வகையில் அணிவிப்பார்கள். அதாங்க, இந்த கேரள யானைகளுக்கு ஒரு அழகான வேலைப்பாடுகள் நிறைந்த துணி போன்ற ஒன்றை யானையின் நெற்றியில் போட்டுவிடுகிறார்களே அதுதான் “கட்படாம்” அல்லது “கண் படாம்”. அதைப் போடாமல் விட்டால் மற்றவர்களுக்க் ஆபத்து.
சரி, இந்தக் கதையெல்லம் இப்போது எதற்கு? காரணம் இருக்குங்க.
எப்படி இந்த களிறின் (களிறு என்றால் ஆண் யானை. பிடி என்றால் பெண் யானை) ‘கட்படாம்’ மற்றவர்களைக் காப்பாற்றுகிறதோ அதைப்போல, இளம் பெண்கள் அணியும் மேலாடை, ஆடவர்களை பாதிக்காமல் காப்பாற்றுகிறதாம். நான் சொல்லலைங்க நம்ம பேராசான் சொல்கிறார்.
“கடாஅக் களிற்றின் மேல் கட்படாம்
படாஅ முலைமேல் துகில்.” --- குறள் 1087; அதிகாரம் – தகை அணங்கு உறுத்தல்
மதம் பிடித்த ஆண் யானைக்கு இட்ட கட்படாமும், இளம் பெண்கள் மேல் ஆடையும் ஒன்று. இரண்டும் மற்றவர்களைக் காப்பதால்.
கடா = மதம் பிடித்தும் பிடிக்காமலும்; படா = பட்டும் படாமலும்; (கடாஅ, படாஅ = அளபெடைகள்); கடாஅக் களிற்றின் மேல் கட்படாம் = மதம் பிடித்த ஆண் யானைக்கு இட்ட கட்படாமும்; படாஅ முலைமேல் துகில் = இளம் பெண்ணின் மேல் ஆடையும் ஒன்று.
எப்படி ‘இளம் பெண்கள்’ என்று கண்டுபிடித்தாய் என்றால் அதற்கும் குறிப்பு இருக்கிறதாம்!
‘படுதல்’ என்றால் சாய்தல் என்று பொருள். ‘படா’ என்றால் சாயாத என்று பொருள். கோடிட்ட இடத்தை நிரப்பி நீங்களே பொருள் கண்டுபிடிச்சுக்கோங்க.
இப்படித்தான் பல அறிஞர் பெருமக்கள் உரை எழுதியிருக்கிறார்கள்.
பி.கு:பெண் யானைகளுக்கு மத நீர் சுரக்காதாம்
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments