top of page
Search

கண்டது மன்னும் ...1146

31/08/2021 (189)

சந்திரகிரகணம் (lunar eclipse) அல்லது நிலவுமறைவு என்பது சூரியன், பூமி, சந்திரன் ஆகியன ஒரே நேர்கோட்டில் வரும்போது நிகழ்வது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். பூமியின் நிழல் திங்களின் மேல் விழும்போது திங்களின் ஒளி மறைந்து இருள் தோன்றும்.


இதை, இராகு எனும் கரும்பாம்பு சந்திரனை கவ்வுவதாக கூறினார்கள் முற்காலத்தில்! அதேபோல், கேது என்னும் செம்பாம்பு, சூரியனை கவ்வும் என்றும், அதனை சூரிய கிரகணம் என்றும் சொல்லி வைத்தார்கள்.


பாம்பு கவ்வியது என்பது உண்மையல்ல. இருப்பினும், அந்த நம்பிக்கை உலகத்தில் காட்டுத்தீயாக பரவியிருந்தது என்பது உண்மை. இந்தக் காலத்திலும் அவ்வாறே நினைத்திருப்பவர்களும் நம் நாட்டில் உள்ளார்கள் என்பதும் மறுக்கவியலாது.


ஒருவேளை, அப்படி அடித்துவிட்டால்தான் எல்லோருக்கும் போய் சேரும் என்று நினைத்தார்களோ என்னவோ? இது நிற்க.


அவ்வாறு கிசு கிசுவிற்கும், அடித்து விடுவதற்கும், தமிழிலே இரு வேறு சொற்களைப் பயன்படுத்தி உள்ளார்கள். ஒன்று ‘அம்பல்’; மற்றொன்று‘அலர்’.


அம்பலுக்கும், அலருக்கும் நேர் பொருள் அரும்புதல், மலர்தல். ஆனால், அம்பலை கிசு கிசுவிற்கும், அலரை அந்த கிசு கிசுவை பழிச்சொல்லாக்கி பரவ விடுதலுக்கும் சங்க காலத்தில் பயன்படுத்தியுள்ளார்கள். குறிப்பாக, காதல் கிசு கிசுக்களுக்கு அம்பல் என்றும், அடித்துவிடும் ‘கச முசா’விற்கு அலரையும் பயன்படுத்தியுள்ளார்கள்.


இதை நம் வள்ளுவப் பெருமான் சில குறள்களில் பயன் படுத்தி உள்ளார். அவர், பெரிய கில்லாடி. சிக்கல் இல்லாததை அவரே நேரடியாக சொல்லுவார். சிக்கலான சமாச்சாரங்களை கதா பாத்திரங்களை சொல்ல விட்டுவிடுவார், நேரடியாக அவர் தலையிட மாட்டார். இன்பத்துப் பால் அவ்வாறே!


அலர் அறிவுறுத்தல் என்ற அதிகாரத்தில் ஒரு குறள்:


கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்

திங்களைப் பாம்பு கொண்டற்று.” --- குறள் 1146; அதிகாரம் - அலர் அறிவுறுத்தல்


கண்டது மன்னும் ஒருநாள் = (நான் என் காதலரைக்) கண்டது ஒரு நாள்; அலர்மன்னும் திங்களைப் பாம்பு கொண்டற்று = (ஆனால்,) பாம்பு, திங்களை கவ்வியதுன்னு அடிச்சு விட்டு ஊரெல்லாம் பரப்புகிறார்களே அது போல பரப்பி விட்டுட்டாங்க;

மன்னும் என்பதற்கு பொருள் இல்லை (அசை நிலை)


இப்படி ஊரார் அடித்துவிடுவதிலும் ஒரு பயன் இருக்காம். என்னவென்று கண்டுபிடிங்க!


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்… உங்கள் அன்பு மதிவாணன்.




Post: Blog2_Post
bottom of page