20/05/2022 (448)
பெரியாரைப் பிழையாமை எனும் அதிகாரத்தில் முதல் குறளில் பெரியோர்களை இகழக் கூடாது என்றும், இரண்டாவது குறளில் இகழ்ந்தால் இடும்பை, அதுவும் பேரா இடும்பை (கடுமையான துன்பம்) வந்து சேரும் என்று பொதுப்பட கூறினார்.
அடுத்த இரு குறள்களில், ஆற்றலில் சிறந்த பெரியோர்களான வேந்தர்களைப் பிழையாமை குறித்து சொல்லப் போகிறார்.
அழிக்கனும்னு நினைத்தால் அழிக்கக் கூடிய திறம் படைத்த மன்னர்கள்/ வேந்தர்கள்/ தலைவர்களிடம் ஒருவன் தவறாக, இழுக்காக நடந்து கொண்டால் என்னாகும்?
யாரையும் ஆலோசியாது, நீதி நூல்களில் பல இருந்தும் அதனையும் பொருட்படுத்தாது, எடுத்தேன், கவிழ்த்தேன் என்று வேந்தனிடம் ஒருவன் இழுக்கு செய்தால் “யானை தன் தலையில் மண் வாரி போட்டுக் கொண்டது போல” என்று ஒரு பழமொழி சொல்வார்கள் இல்லையா அது போல ஆகிவிடும் என்கிறார் நம் பேராசான்.
‘அடல்’ என்ற சொல்லுக்கு அழித்தல் என்றும் வெற்றி என்றும் பொருள் இருக்காம்.
‘அடல் வேண்டின் ஆற்றுபவர்’ என்றால் அதாவது, சொல்லி அடிக்கும் திறன் உடைய வேந்தர்கள்.
‘கெடல் வேண்டின் கேளாது இழுக்கு செய்க’ என்றால் என்ன சொல்ல?
நான் அழிந்துதான் போவேன்னா, யார் பேச்சையும் கேட்காம பெரியோர்களிடம் தவறாக நடந்துகொள், அழிவு நிச்சயம் என்கிறார்.
(‘வீட்டிலே சொல்லிட்டு வந்துட்டியா’ன்னு ஒரு சொலவடை இருக்கு இல்லையா அது போல).
“கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்றுபவர்கண் இழுக்கு.” --- குறள் 893; அதிகாரம் – பெரியாரைப்பிழையாமை
அடல் = வெற்றி, அழித்தல்;
அடல் வேண்டின் ஆற்றுபவர்கண், கெடல்வேண்டின் கேளாது இழுக்கு செய்க!
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com )
Comments