top of page
Search

குடிப்பிறந்து தன் கண் ... குறள் 794

15/12/2021 (295)

குணம், குடிமை, குற்றம், குன்றா இனன் ஆகிய நான்கினைப் பார்த்து நட்பை யாக்க வேண்டும் என்று நம் பேராசான், குறள் 793ல், சொன்னதைப் பார்த்தோம்.


அதற்கு அடுத்து என்ன பார்க்கனும் என்பதை மேலும் சொல்கிறார். அந்த நட்பினிடம் கொஞ்சம் பயம் இருக்கனுமாம்! என்ன பயம்?


அதாவது, தன் மேல ஏதாவது பழி வந்துவிடுமோன்னு பயம் இருக்கனுமாம். உண்மைக்கும், அறத்துக்கும் பயப்படனுமாம். சிலர் என்ன பண்ணுவார்கள் என்றால், அவர்களைப் பொறுத்தவரையில் சரியாக இருப்பார்கள். அதனால், கொஞ்சம் கடுமையாக இருப்பார்கள், வளைந்து கொடுக்கும் தன்மை இருக்காது. சரியாகவே இருந்தாலும் அது சரியான தருணமா என்றெல்லாம் சிந்திக்க மாட்டாங்க. மற்றவர்கள் செய்யும் பிழையைப் பொறுக்க மாட்டாங்க.


அதீத கோவம் வரும். இந்த மாதிரி இருந்தாலும் கடினம்தான். இல்வாழ்வுக்கு அடிப்படை அன்பு; பொது வாழ்வுக்கு அடிப்படை அருள். இதை எந்த நிலையிலும் மறந்துவிடக் கூடாது. இல்லையென்றால், அவர்களிடம் இருக்கும் ஆயிரம் தகுதிகளும் அவர்களுக்குத் தடைக் கற்களாகவே மாறிவிடும். ஆகையால், என்ன இருந்தாலும், நம்ம செயல்களால் ஏதாவது பழிவந்துவிடுமோ என்ற உணர்வு எப்போதும் இருக்கனும் என்கிறார்.


முன் சொன்ன நான்கின் வழித்தோன்றி வந்து இருக்கு அந்த நட்புன்னு தெரிகிறது. மேலும், பழிக்கும் அஞ்சுபவராகத்தான் இருக்கிறார் அவர் என்றால், அவரை விடக்கூடாதாம். ‘வாராது வந்த மாமணி’ என்று போற்றி எதைக் கொடுத்தாவது அவர்களின் நட்பைப் பெற முயற்சிக்கனுமாம்.


நம்மாளு: இது எப்படி சரியாக இருக்கும் ஐயா? அவர் பாணியே தனியாக இருக்கு அவருக்கு ‘லஞ்சம்’ கொடுக்க முடியுமா? அப்படி இருந்தால் அது நட்பாக இருக்குமா?


ஆசிரியர்: அவருக்கு கொடுக்க வேண்டியதில்லை. கொடுக்கனும் என்றால் நாம விட்டுக் கொடுக்கனும். எதை விட்டுக் கொடுக்கனும்? நம்ம நேரத்தை விட்டுக் கொடுக்கனும், நம்ம இடத்தை விட்டுக் கொடுக்கனும், நம்ம மிடுக்கை விட்டுக் கொடுக்கனும் … இப்படி பலவற்றைக் கொடுத்தாவது அந்த நட்பை பிடிக்க வேண்டும் புரியுதா?


நம்மாளு: (மைண்ட் வாய்ஸ் – அப்பாடா நான் என்னமோ எங்கிட்ட இருப்பதைக் கொடுக்கனும்னு நினைத்தேன். அது இல்லைப்போல)


குடிப்பிறந்து தன் கண் பழிநாணு வானைக்

கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.” --- குறள் 794; அதிகாரம் – நட்பாராய்தல்


குடிப்பிறந்து தன் கண் பழிநாணு வானைக் = முன் சொன்ன நான்கின் வழித்தோன்றி மேலும் தன்னிடம் ஏதாவது பழி வந்து ஒட்டிக்கொள்ளுமோ என்று அஞ்சுபவனின்; நட்பு = நட்பை; கொடுத்தும் கொளல்வேண்டும் = நாம் எதையும் விட்டுக் கொடுத்து கொள்ள வேண்டும்.


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.




21 views3 comments
Post: Blog2_Post
bottom of page