top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

சற்காரிய வாதம், 24/04/2022

Updated: Sep 1, 2024

24/04/2022 (422)

ஊழ், பால், முறை, உண்மை, தெய்வம், நியதி, விதி என்பன ஒரு பொருட்கிளவி என்கிறார் பரிமேலழகப் பெருமான்.

ஒரு பொருட்கிளவி என்றால் ஒரே பொருளைக் குறிக்கும் பல சொற்கள். (கிளவி = சொல்)


“எல்லாம் எழுதி வைச்சுட்டான்” என்கிறோமே அதுதான் விதி. Akhashic records (ஆகாசிக் பதிவுகள்) என்று ஒன்று இருக்காம். இந்த உலகத்தில் நடக்கும் அனைத்தும் அதில் பதிவுகளாக இருக்குமாம். அதுபடியே அனைத்தும் நடப்பதாக இறையியல்/மதவியல் குறித்து ஆராயும் தத்துவியலாளர்கள் சொல்கிறார்கள். வலைத்தளத்தில் தேடிப்பாருங்க. சுவாரசியமானப் பல தகல்வகள் கிடைக்கலாம்.


சைவ சித்தாந்தில் ஆகாசம் ஒரு மூலப் பொருளாகச் சொல்லப் படுகின்றது. ஆகாசம் ஏதோ மேலே இருப்பது என்று நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். அது அப்படி இல்லையாம். நாம எல்லோருமே ஆகாசத்தில்தான் இருக்கிறோமாம். (அப்படியா? ம்ம்.. என்னென்னவோ சொல்கிறார்கள்.)


சற்காரிய வாதம்ன்னு ஒன்று இருக்கு. சைவ சித்தாந்தாத்தின் அடிப்படைகளில் அதுவும் ஒன்று. அது என்னவென்றால் “உள்ளது அழியாது, இல்லது தோன்றாது”.


இன்றைக்கு கொஞ்சம் தத்துவம்தான் என்று ஆசிரியர் மேலும் தொடர்ந்தார்.

மகாகவி பாரதி ‘சக்தி’ என்றத் தலைப்பிலே ஒரு தத்துவப் புதையலை வசனக்கவிதையாக வடித்து வைத்திருக்கிறார். அதிலிருந்து:


“… மண்ணிலே வேலி போடலாம். வானத்திலே வேலி போடலாமா?” என்றான் ராம கிருஷ்ண முனி.

ஜடத்தைக் கட்டலாம். சக்தியைக் கட்டலாமா? உடலைக் கட்டலாம். உயிரைக் கட்டலாமா? …

… உடலைக் கட்டு, உயிரைக் கட்டலாம். உயிரைக் கட்டு உள்ளத்தைக் கட்டலாம். உள்ளத்தைக் கட்டு. சக்தியை கட்டலாம்…

என் முன்னே பஞ்சுத் தலையணை கிடக்கிறது. அதற்கு ஒரு வடிவம். ஓரளவு, ஒரு நியமம் ஏற்பட்டிருக்கின்றது. இந்த நியமத்தை, அழியாதபடி, சக்தி பின்னே நின்று காத்துக்கொண்டிருக்கிறாள்.

மனித ஜாதி இருக்குமளவும் இதே தலையணை அழிவெய்தாதபடி காக்கலாம்.

அதனை அடிக்கடி புதுப்பித்தக்கொண்டிருந்தால், அந்த “வடிவத்திலே”சக்தி நீடித்து நிற்கும். புதுப்பிக்கா விட்டால் அவ்“வடிவம்”மாறும்.

… வடிவம் மாறினும் சக்தி மாறுவதில்லை…”


நீண்ட கவிதையிது. நேரமிருந்தால் படிச்சு பாருங்க.

இந்தக் கருத்தைத்தான் அறிவியலில் “Law of conservation of energy” என்கிறார்கள்.


நம்மாளு: இதற்கும், நாம பார்த்துக் கொண்டிருக்கும் குறள்களுக்கும் என்ன சார் சம்பந்தம்?


நாளைக்குத் தொடரலாம் என்று ஆசிரியர் கூறிவிட்டார்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)




Comments


bottom of page