11/07/2023 (859)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
இறைமாட்சி அதிகாரத்தின் முதல் குறளில் அரசின் ஆறு அங்கங்களை படை குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்று வரிசைப்படுத்தினார். காண்க 27/06/2023 (845). மீள்பார்வைக்காக:
“படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.” --- குறள் 381; அதிகாரம் – இறைமாட்சி
படையும், குடியும், கூழும், அமைச்சும், நட்பும் அரணும் என்று சொல்லப்பட்ட ஆறு உறுப்புகளையும் உடையவன் அரசர்களுள் சிறந்தவன்.
ஆகவே, கூழ் என்னும் பொருள் செயல்வகையை அடுத்து படையைக் குறித்து படை மாட்சி (77 ஆவது அதிகாரம்), படைச் செருக்கு (78 ஆவது அதிகாரம்) என்னும் இரு அதிகாரங்களின் மூலம் விளக்குகிறார்.
“தலை” என்றால் சிறந்தது முதன்மையானது என்று பொருள். எதில் எது சிறந்தது என்பதைக் குறிக்க நம் பேராசான் “தலை” என்ற சொல்லைக் குறளின் இறுதிச் சொல்லாக வைத்து இருபத்தொரு குறள்களை அமைத்துள்ளார்.
உதாரணமாக, செல்வத்துள் எல்லாம் தலை எது என்று கேட்டால் செவிச் செல்வம் என்கிறார். அதாவது, காதைக் கூர்மையாகத் தீட்டி வைத்துக் கொண்டிருப்பது. காது என்பது ஒரு குறியீடு. அதாவது, புது வரவுகளை உட்கொள்ள நமது புலன்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். காண்க 02/03/2021 (44). மீள்பார்வைக்காக:
“செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ் செல்வத்து ளெல்லாந் தலை.” – குறள் 411 அதிகாரம் – கேள்வி
செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் = ஒருவர் பெறக்கூடிய செல்வத்துள் எல்லாம் எது சிறந்த செல்வம் என்றால் கேள்விச் செல்வம்தான்; அச் செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை = அந்தக் கேள்விச் செல்வமானது ஏனைய பொருள் செல்வங்களுள் எல்லாம் முதன்மையானது.
ஒருவர் பெறக்கூடிய செல்வத்துள் எல்லாம் எது சிறந்த செல்வம் என்றால் கேள்விச் செல்வம்தான்; அந்தக் கேள்விச் செல்வமானது ஏனைய பொருள் செல்வங்களுள் எல்லாம் முதன்மையானது.
அண்மைக்காலம்வரை, அறிவே ஆற்றல் (Knowledge is power) என்று சொல்லிக் கொண்டிருந்தோம். இது முக்கியம்தான். ஆனால், இப்போது தகவல்களே வலிமையான சக்தி (Information is power) என்கிறோம். இந்தக் காலத்தை தகவல் காலம் (Information age) என்கிறோம். யாரிடம் அதிகமானத் தகவல்கள் இருக்கிறதோ அவர்கள் வெல்வதைப் பார்க்க முடிகிறது. Data analytics (தரவுகளின் பகுப்பாய்வு), Artificial Intelligence (செயற்கை நுண்ணறிவு), Machine learning (இயந்திரவழி கற்றல்), Behavioral science (நடத்தையியல்)... இப்படி பல துறைகள் அசுர வேகத்தில் வளர்ந்துவருகிறது.
நாம் அடுத்த நொடி என்ன செய்ய வேண்டும் என்பதை ‘அவர்கள்’ தீர்மானிக்கிறார்கள்! யார் அந்த அவர்கள்? அவர்கள்தாம் நமது தகவல்களை எல்லாம் சேகரித்துக் கொண்டிருப்பவர்கள்! Information, information, collection of all information.... எங்கு சென்றாலும் கேட்கப்படும் முதல் கேள்வி ‘உங்கள் கைப்பேசியின் எண் என்ன?’ என்பதுதான்!
இதைத்தான் நம் வள்ளுவப் பெருமான் செல்வத்துள் எல்லாம் தலை என்று சொல்லிச் சென்றார்! ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு விதமாகத் தகவல்கள் சேகரிக்கப்பட்டுச் செல்வங்களாக மாற்றப்படுகிறது என்பதுதான் அழியாத உண்மை!
படை மாட்சியை விட்டுவிட்டு நாம் கேள்விச் செல்வத்துள் நுழைந்துவிட்டோமே என்று என்ன வேண்டாம். படைமாட்சி அதிகாரத்தின் முதல் குறளிலிலும் இன்னொரு செல்வத்துள் எல்லாம் தலையைச் சொல்கிறார்!
வெறுக்கை என்றால் செல்வம், பொன், விழுப்பொருள், மிகுதி என்றெல்லாம் பொருள்.
வெறும்கை என்றால் நமக்குத் தெரியும். வெறுக்கை என்றால்?
கை முழுவதும் செல்வத்தால் நிரம்பி இருப்பதுதான் வெறுக்கை!
நாளைத் தொடர்வோம்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments