top of page
Search

தொகச் சொல்லி தூவாத நீக்கி ... குறள் 685

18/09/2021 (207)

நலமா? இன்றக்கு சிரித்துப் பேச்சொல்லும் மற்றும் ஓர் குறள். இது தூது(69) என்ற அதிகாரத்தில் உள்ளது.


தூது என்ற சொல்லே ஒரு சிறப்பானச் சொல். ஒரு நெடிலும் ஒரு குறிலும் இணைந்து பொருள் தரும்.


தூதுவனுக்கு இலக்கணங்கள் வகுக்கிறார் நம் பேராசான். ஒரு தூதுவன் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா, செய்திகளைத் தொகுத்துச் சொல்பவனாகவும், தவிர்க்க வேண்டியவைகளை தவிர்த்து கேட்பவர் மனம் லேசாகுமாறு நகைச்சுவை உணர்வோடும் கூறுவது மட்டுமல்லாமல் அது அவன் வந்த காரியம் இனிதே முடியும் வகையிலும் தூது சொல்ல வேண்டுமாம்.


தொகச் சொல்லி தூவாத நீக்கி நகச் சொல்லி

நன்றி பயப்பதாம் தூது.” --- குறள் 685; அதிகாரம் – தூது


தொகச் சொல்லி = கூறியவற்றைத் தொகுத்துச் சொல்வதும்; தூவாத நீக்கி = வேண்டாதவற்றை நீக்கியும்; நகச் சொல்லி = மனம் மலர்ந்து சிரிக்கும் படியும்; நன்றி பயப்பதாம் தூது = (சென்ற தூதினால்) நன்மை விளைவதும் தூது.


கவி காளமேகம் இயற்றிய ஒரு தகர வர்க்கப் பாடல். தகர வர்கமா? தகராறு வர்க்கமா? என்று நீங்களே பாருங்கள்!


“தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது

தூதிதூ தொத்தித்த தூததே – தாதொத்த

துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது

தித்தித்த தோதித் திதி” --- மகாகவி காளமேகம்


விளங்குவது எவ்வாறு? இப்படிப் பார்க்கலாம்


தாதி தூதோ தீது = அடிமையின் தூது நன்மை பயக்காது

தத்தை தூது ஓதாது = கிளியோ நான் சொல்ல வேண்டியவைகளை இது பேசாது

தூதி தூது ஒத்தித்த தூது அதே = அவருக்கு நண்பனை தூது அனுப்பினால் அவ்வளவுதான் நேரம் போதாது

தாது ஒத்த துத்தி தத்தா = (இவர்களுக்காக நான் காத்திருந்தால் என் மேல துருப்பிடிக்காம (பசலை நோய்) போகாது

தே துதித்தே தொத்து தீது = தெய்வத்தைத் துதித்து சும்மா இருப்பதும் வீண்

தித்தித்தது ஓதித் திதி = அந்த இனிமையானவற்றை நீயே சொல்லிவிடு


அடிமைகள் தூது சென்றால் பயனிருக்காது

கிளிகளை தூது அனுப்பினால் அவைகள் பேசாது

நண்பர்களைத் தூது அனுப்பினால் நேரம் போதாது

கடவுளே தூது செல்வான் என்றால் காலம் போதாது

நீயே உனக்கு தூது சென்று இனியது கூறு.


எப்படி, பின்னியிருக்காங்க பாருங்க ஒரு ‘த’ என்ற எழுத்தைக் கொண்டு!

மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன். உங்கள் அன்பு மதிவாணன்.



6 views0 comments
Post: Blog2_Post
bottom of page